/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ப்ரீடைவிங்' சர்வதேச போட்டியில் தமிழக வீரர் அர்ச்சனா புது சாதனை
/
'ப்ரீடைவிங்' சர்வதேச போட்டியில் தமிழக வீரர் அர்ச்சனா புது சாதனை
'ப்ரீடைவிங்' சர்வதேச போட்டியில் தமிழக வீரர் அர்ச்சனா புது சாதனை
'ப்ரீடைவிங்' சர்வதேச போட்டியில் தமிழக வீரர் அர்ச்சனா புது சாதனை
ADDED : ஜூலை 13, 2025 12:13 AM

சென்னை :'ப்ரீடைவிங் சாம்பியன்ஷிப்' போட்டியில், ஒரே மூச்சில், 137 மீட்டர் நீந்தி தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா தியாகராஜன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச அளவில், 'ப்ரீடைவிங்' என்ற விளையாட்டு, ஒரே மூச்சில் நீருக்குள் நீந்தும் திறனை அடிப்படையாக கொண்டது. இதில், ஒரே இடத்தில் நின்று மூச்சை பிடித்து இருப்பது, ஆழப் பயணம் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன.
பொதுவாக கடல் அல்லது நீச்சல் குளங்களில் இந்த விளையாட்டு நடக்கும். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம். இந்தியாவில் இது வளர்ந்து வரும் விளையாட்டாக உள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் வகாயாமா மாகாணத்தில், 'அய்டா' அமைப்பின் சார்பில், கடந்த ஏப்ரலில், 'ப்ரீடைவிங்' சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 49 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவை பிரதிநிதியாக, தமிழகத்தின் நெய்வேலியைச் சேர்ந்த அர்ச்சனா தியாகராஜன் பங்கேற்றார். இவர், 10 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
இந்த சர்வதேச போட்டியில், ஒரே மூச்சில் 137 மீட்டர் நீந்தியும், 4 நிமிடங்கள் 22 வினாடிகள் நீச்சல் குளத்தில் மூச்சை பிடித்து நிலைத்திருந்தும், அர்ச்சனா தேசிய அளவில் புதிய சாதனை நிகழ்த்திஉள்ளார்.
தமிழகம் திரும்பிய அர்ச்சனா தியாகராஜன் கூறியதாவது:
யோகா பயிற்சியாளராக இருப்பதால், மூச்சைக் கட்டுப்படுத்தும் திறன், மன அமைதி ஆகியவை இந்த விளையாட்டில் சிறப்பாக செயல்பட உதவின. ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வந்தேன்.
நம் நாட்டில், யோகா வழி கற்றலில் திறமை வாய்ந்த பல வீரர்கள் உள்ளனர். அவர்கள், ப்ரீடைவிங்கில் ஆர்வம்காட்டினால், சர்வதேச அளவில் முன்னேற முடியும். இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், நாட்டில் வேகமாக வளரக்கூடிய விளையாட்டாக இதுமாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.