/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரூ.9,928 கோடியில் தமிழக அரசு ஒப்புதல்
/
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரூ.9,928 கோடியில் தமிழக அரசு ஒப்புதல்
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரூ.9,928 கோடியில் தமிழக அரசு ஒப்புதல்
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரூ.9,928 கோடியில் தமிழக அரசு ஒப்புதல்
ADDED : மே 02, 2025 11:54 PM
சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை, 9,928 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்க உள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கோயம்பேடு - ஆவடி வரை மெட்ரோ ரயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பயணியரின் கோரிக்கை ஏற்று, இந்த திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க, பல கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்., 20ல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு 9,928.33 கோடி ரூபாயில் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் வழித்தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த உள்ளது.
இதனால், மெட்ரோ ரயிலில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அவர்கள் எளிமையாக சென்று வர முடியும்.
இந்த வழித்தடத்தில், கோயம்பேடில் துவங்கி, பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும். அம்பத்துார் எஸ்டேட், ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
மேலும், அம்பத்துார் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து ஆகிய பகுதிகளுக்கு அருகில், மூன்று இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைந்து கட்டப்படும்.
இந்த திட்டத்தின் அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
இந்த திட்டத்துக்கு, மொத்தம் 112.56 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியை விரைவில் துவங்க உள்ளோம். இதற்காக, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.