/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிக்கடி சேதமாகும் மூடுகால்வாய் தரமற்ற பணியால் வரிப்பணம் வீண்
/
அடிக்கடி சேதமாகும் மூடுகால்வாய் தரமற்ற பணியால் வரிப்பணம் வீண்
அடிக்கடி சேதமாகும் மூடுகால்வாய் தரமற்ற பணியால் வரிப்பணம் வீண்
அடிக்கடி சேதமாகும் மூடுகால்வாய் தரமற்ற பணியால் வரிப்பணம் வீண்
ADDED : நவ 17, 2025 03:31 AM

பம்மல்: தாம்பரம் அடுத்த கவுல்பஜாரில், ஒரு வருடத்திற்கு முன் கட்டப்பட்ட மூடுகால்வாய், அடிக்கடி சேதமாவதும், அதை முறையாக சரிசெய்யாததும் தொடர்கிறது. தரமற்ற பணியே இதற்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
பம்மல், ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்புகள் வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கிறது. முறையான கால்வாய் இல்லாததால், இப்பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதற்கு தீர்வாக, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி - மூவர் நகர், மூவர் நகர் - அடையாறு ஆறு என, இரண்டு கட்டங்களாக, 7.15 கோடி ரூபாய் செலவில், 5,000 அடி துாரத்திற்கு மூடுகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இக்கால்வாயை திட்டமிடாமல் கட்டியதால், கவுல்பஜார் பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் கழிவுநீர் தேங்குகிறது. மற்றொருபுறம், கால்வாய் கட்டி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், ஆங்காங்கே உடைந்து பள்ளம் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையினர், இந்த பள்ளங்களில் சிமென்ட் கலவை கொண்டு மூடுகின்றனர்.
அப்படியிருந்தும், சில நாட்களில் மீண்டும் உடைந்து சேதமாவது தொடர் கதையாகிவிட்டது. கால்வாயை தரமற்ற முறையில் கட்டியதே இதற்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கால்வாய் கட்டும் போதே, தரமாக இல்லை என, அவ்வூராட்சி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
அப்போது, நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல், வந்த வரைக்கும் கட்டிவிட்டனர். பணியின் தரத்தை சோதித்து, தரமாக கட்டியிருந்தால், மூடுகால்வாய் அடிக்கடி உடைவதை தடுத்திருக்கலாம். மக்கள் வரிப்பணமும் வீணாகியிருக்காது.
அதனால், இவ்விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு, இக்கால்வாயை நேரில் ஆய்வு செய்து, தரமான ஒட்டுப்பணி மேற்கொள்ளவும், தரமற்ற முறையில் கால்வாய் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

