மாற்றுத்திறனாளி சிறுமியை சீண்டிய டீ மாஸ்டருக்கு 20 ஆண்டு சிறை
மாற்றுத்திறனாளி சிறுமியை சீண்டிய டீ மாஸ்டருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 03, 2026 01:36 AM
சென்னை: தண்டையார்பேட்டையில் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டீ மாஸ்டருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு, நான்கு குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இவர்களது மூன்றாவது மகளான 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, தந்தை பாதுகாப்பில் உள்ளார்.
அதே பகுதி கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த துரை, 48, மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அவ்வப் போது பேசி வந்துள்ளார்.
கடந்த 2025, ஏப்., 23ல் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று, டீ மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல் பல முறை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தந்தை, வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின், துரையை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்து வந்தது. போலீஸ் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, டீ மாஸ்டர் துரை மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 10.20 லட்சம் ரூபாய், தமிழக அரசு இழப்பீடு வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.
