/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டீ கடைக்காரருக்கு வெட்டு இளநீர் கடைக்காரர் கைது
/
டீ கடைக்காரருக்கு வெட்டு இளநீர் கடைக்காரர் கைது
ADDED : ஜூலை 25, 2025 12:29 AM
தண்டையார்பேட்டை,டீ கடைக்காரரை அரிவாளால் வெட்டிய இளநீர் கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, சுப்புராயன் தெரு எதிரில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரம் டீக்கடை நடத்தி வருபவர் ரிஷிகேஷ், 50. இவரது கடைக்கு முன், பிளாட்பாரத்தில் முத்தையா, 75, என்பவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இளநீர் கடை நடத்தி வந்துள்ளார்.
இளநீர் கடையால், டீக்கடையில் வியாபாரம் பாதிப்பதாகவும், எனவே இளநீர் கடையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ரிஷிகேஷ், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, இளநீர் கடையை அப்புறப்படுத்த, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவையடுத்து, நேற்று அதிகாலை, இளநீர் கடையை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். காலையில் வந்து பார்த்த போது, இளநீர் கடை அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு, முத்தையா அதிர்ச்சியடைந்தார்.
இதனால், டீக்கடைக்காரருக்கும் இளநீர் கடைக்காரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையா, இளநீர் வெட்டும் கத்தியை எடுத்து, ரிஷிகேஷ் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார்.
காயமடைந்த ரிஷிகேஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்தையா, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.