/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜவுளி கடை வியாபாரிகள் கல்லறை சாலையில் மறியல்
/
ஜவுளி கடை வியாபாரிகள் கல்லறை சாலையில் மறியல்
ADDED : ஆக 01, 2025 12:49 AM

வண்ணாரப்பேட்டை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை விரைந்து முடிக்க கோரி, வண்ணாரப்பேட்டை 'கட் பீஸ்' ஜவுளி கடை வியாபாரிகள், நேற்று கல்லறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ., சாலை முதல் எம்.சி., சாலை வரை, 1,500க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இங்கு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 28 கோடி ரூபாய் செலவில் ஒரு கி.மீ., துாரத்திற்கு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 2024ல் துவங்கி மந்தகதியில் பணி நடந்து வருவதாலும், நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பாலும், வாடிக்கையாளர்கள் எம்.சி., சாலைக்குள் நுழையவே முடிவதில்லை. இதனால், வியாபாரம் சரியாக நடக்காமல், கடைகாரர்கள் பலரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
எனவே, 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ஆட்டோ, பைக், ஸ்கூட்டர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்' என கோரி, சென்னை வண்ணாரப்பேட்டை கட் - பீஸ் ஜவுளி வியாபாரி சங்கத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், எம்.சி., சாலை - கல்லறை சாலை சந்திப்பில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ராயபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேசினார்.
அதன்படி, 100 மீட்டர் துாரம் பணிகளை முழுமையாக முடித்த பின், அடுத்த, 100 மீட்டர் பணிகளை மேற்கொள்வதாகவும், இரு பக்கமும், ஆட்டோ, ஸ்கூட்டர் பைக் செல்லும் வகையில் வழிவிடப்படும் எனவும், அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, வியாபாரிகள் கலைந்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

