/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நங்கநல்லுார் மக்களின் 25 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைக்கிறது தீர்வு!: சுரங்கப்பாதை, சாலை இணைப்புக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு
/
நங்கநல்லுார் மக்களின் 25 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைக்கிறது தீர்வு!: சுரங்கப்பாதை, சாலை இணைப்புக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு
நங்கநல்லுார் மக்களின் 25 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைக்கிறது தீர்வு!: சுரங்கப்பாதை, சாலை இணைப்புக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு
நங்கநல்லுார் மக்களின் 25 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைக்கிறது தீர்வு!: சுரங்கப்பாதை, சாலை இணைப்புக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு
UPDATED : டிச 18, 2025 09:33 AM
ADDED : டிச 18, 2025 05:03 AM

ஆலந்துார்: நங்கநல்லுார் ஐந்தாவது பிரதான சாலையில் இருந்து, பழவந்தாங்கல் சுரங்கப்பாதைக்கு, நேரடி இணைப்பு சாலை ஏற்படுத்தும் பணிக்கு நிலம் கையகப்படுத்த, 29.57 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளால் 25 ஆண்டுகாலமாக தவித்து வரும் மக்களின் போராட்டத்திற்கு, தீர்வு கிடைக்க உள்ளது. சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில், பழவந்தாங்கல் பகுதி உள்ளது. இப்பகுதி மக்கள், ஜி.எஸ்.டி., சாலையை அடைய அங்குள்ள சுரங்கப்பாதையை கடக்க வேண்டும்.
தவிர, நங்கநல்லுார், வாணுவம்பேட்டை, உள்ளகரம், மூவரசம்பட்டு, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில், இந்த சுரங்கப்பாதை வழியாக ஜி.எஸ்.டி., சாலையை அடைகின்றனர்.
இதில், அந்தந்த பகுதிகளில் இருந்து நங்கநல்லுார், ஐந்தாவது பிரதான சாலை வரை எந்த நெரிசலுமின்றி வரும் வாகன ஓட்டிகள், பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை அடைவதற்குள் பெரும் சிரமத்தை அடைகின்றனர். காரணம் நேரடி வழித்தடம் இல்லை.
அனைத்து வாகனங்களும், கல்லுாரி சாலையை அடைந்து, வேம்புலி அம்மன் கோவில் தெரு, கிருஷ்ண சாமி தெரு வழியாக செல்ல வேண்டும்.
குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் திருப்பங்கள் அதிகம் உள்ளதால், கனரக வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் உள்ளது.
தவிர, அவ்வப்போது விபத்துகளும், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.
கலெக்டர் பரிந்துரை
இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, நங்கநல்லுார் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, 2000ம் ஆண்டு அரசுக்கு மனு அளித்தது. அப்போதைய ஆலந்துார் நகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் ராஜாராம் ஆய்வு மேற்கொண்டு, தற்போதுள்ள வழித்தடங்களில் மாநகர பேருந்துகளை இயக்க வைத்தார்.
பேருந்து சென்று வருவதில் உள்ள சிக்கல், அதனால் ஏற்படும் போக்குவரத்து பிரச்னை உள்ளிட்ட சிரமங்களை அறிந்த அவர், ஐந்தாவது பிரதான சாலையில் இருந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதைக்கு, எந்த வளைவுகளும் இல்லாத வகையில், நேராக செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என, மாநில நெடுஞ்சாலை துறைக்கு, கலெக்டர் பரிந்துரை செய்தார்.
நிதி கிடைத்ததும் திட்டத்தை செயல்படுத்துவதாக, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் கூறியது. இத்திட்டத்தை அப்போதே நிறைவேற்றி இருந்தால், அன்றைய நிலத்தின் மதிப்புபடி, ஒரு கோடி ரூபாய்க்குள் செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
திட்டம் நிறைவேற்றப்படும் என , அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தன.
சங்கங்களின் கோரிக்கை
எனினும், நலச்சங்கங்கள் தொடர்ந்து போராடி வந்தன. ஒவ்வொரு தேர்தலின்போதும், இத்திட்டம் நிறைவேற்றப்படும் என, ஒவ்வொரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி இடம்பெற்றுவந்தது. நான்கு தேர்தல் கடந்தும், இத்திட்டம் கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில், ஐந்தாவது பிரதான சாலையில் இருந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதை வரை, அச்சாலை திட்டத்தை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 120 மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு 1,069 சதுர மீட்டர் நிலம் தேவை. இதில், அரசு நிலம் 84 சதுர மீட்டர், அரசு புறம்போக்கு நிலம் 8 சதுர மீட்டர் உள்ளது.
தனியார் நிலம், 979 சதுர மீட்டர் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த இடத்தில் 16 குடியிருப்புகள் கட்டடங்கள் உள்ளன. இவை அகற்றப்பட உள்ளன.
இதில், நிலம் எடுப்புக்காக, 29.57 கோடி ரூபாய்க்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்திய பின், சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு சாலை அமைக்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும் என, தெரியவருகிறது.

