/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படகு தளம், குட்டி தீவுகளுடன் சீரமைக்கப்படுகிறது ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க ரூ.4.96 கோடி மதிப்பீடில் நடவடிக்கை
/
படகு தளம், குட்டி தீவுகளுடன் சீரமைக்கப்படுகிறது ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க ரூ.4.96 கோடி மதிப்பீடில் நடவடிக்கை
படகு தளம், குட்டி தீவுகளுடன் சீரமைக்கப்படுகிறது ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க ரூ.4.96 கோடி மதிப்பீடில் நடவடிக்கை
படகு தளம், குட்டி தீவுகளுடன் சீரமைக்கப்படுகிறது ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க ரூ.4.96 கோடி மதிப்பீடில் நடவடிக்கை
ADDED : ஜன 19, 2025 10:01 PM

மதுரவாயல்:வருவாய் துறை ஆவணத்தில் 55 ஏக்கர் பரந்து விரிந்திருந்த ஆலப்பாக்கம் ஏரி, காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் 8.50 ஏக்கராக சுருங்கியது. எஞ்சியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளை மீட்டு, 4.96 கோடி ரூபாய் மதிப்பீடில் படகு தளம், குட்டி தீவுகளுடன் பொழுதுபோக்கு இடமாக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், மதுரவாயல் பகுதியில் ஆலப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது.
இதன் பரப்பு 140 ஏக்கர் என கூறப்பட்டாலும், 55 ஏக்கருக்கு மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி என, வருவாய் துறை ஆவணச் சான்றுகள் வாயிலாக தெரிய வருகிறது.
ஏரிக்கு காட்டுப்பாக்கம், நுாம்பல், தெள்ளியரகரம், செட்டியார் அகரம், வானகரம், சிவபூதம், மேட்டுக்குப்பம், ஓடமான் நகர், ேஷக்மானியம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து இருந்துள்ளது. கிருஷ்ணா நகர் 1வது பிரதான சாலையில் இருந்த கலங்கல் வழியாக வெளியேறும் நீர், விருகம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கால்வாயும் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் மாயமாகி விட்டன. ஏரியின் பெரும்பாலான பகுதிகளும் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்த ஆலப்பாக்கம் ஏரி, தற்போது ஆக்கிரமிப்புகளால் 8.50 ஏக்கராக சுருங்கியுள்ளது.
எஞ்சியுள்ள இடமும் அடிக்கடி ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின. இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானதால், வருவாய் துறையினரால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முறையாக கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறையும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
ரூ.30 லட்சம் வேலி
கடந்த 2012 மார்ச் மாதம் மாநகராட்சி கூட்டத்தில், ஏரி ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பீடில் கம்பி வேலி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள், பெயரளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைத்தனர். ஆனால், முறையான பராமிரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், அப்பகுதிகளும் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டன.
2015ல் பெய்த பேய் மாரி
கடந்த 2015 கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையின்போது ஏரி நிரம்பி, 144, 146, 147, 148 ஆகிய வார்டுகளின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியவில்லை.
இதையடுத்து, ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஆலப்பாக்கம் பிரதான சாலை வழியாக மதுரவாயல் கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.
அடுத்தடுத்த மழைக்காலங்களிலும் ஏரி நிரம்பி சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக மாறியது. இதற்கு மழைநீர் வடிகாலில், 110 மீட்டர் துாரம் தனியார் இடத்தில் வருவதால் பல ஆண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்தது. தற்போது, 43 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டுள்ளது.
2.50 மீட்டர் ஆழம்
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில், ஆலப்பாக்கம் ஏரியில் எஞ்சியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில், கரை சீரமைத்து பொழுதுபோக்கு இடமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக 4.96 கோடி ரூபாய் மதிப்பில் துார் வாரி, 4.50 மீட்டராக்க ஆழப்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏரியை ஆழப்படுத்துவதன் வாயிலாக 3.80 மில்லியன் கன அடி கொள்ளளவாக மாற உள்ளது. அதனுடன் கரை அமைத்து, ஏரியை சுற்றி 1.6 கி.மீ., துாரம் நடைபாதை, மின் விளக்குள், இருக்கைகள் என, பசுமை பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், நீர்ப்பிடிப்பு பகுதி நடுவே குட்டி தீவு, மீன்பிடி பகுதி மற்றும் படகு சவாரி ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
பொழுதுபோக்கு இடம்
மழைக்காலங்களில் ஆலப்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து, நான்கு வார்டுகள் பாதிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக ஏரி உபரி நீர் செல்ல மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியை ஆழப்படுத்துவதால், அதன் கொள்ளளவு அதிகரிப்பதுடன், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும், ஏரியை சுற்றி பசுமை பூங்கா அமைப்பதால், மக்களை கவரும் பொழுதுபோக்கு தலமாகவும் ஆலப்பாக்கம் ஏரி மாறி விடும்.
- மாநகராட்சி அதிகாரி,
சென்னை.