/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் திறந்துவைத்தும் பயனின்றி முடக்கம் 1,200 வீடுகள் பொதுமக்களுக்கு வழங்க வாரியம் திடீர் முடிவு?
/
முதல்வர் திறந்துவைத்தும் பயனின்றி முடக்கம் 1,200 வீடுகள் பொதுமக்களுக்கு வழங்க வாரியம் திடீர் முடிவு?
முதல்வர் திறந்துவைத்தும் பயனின்றி முடக்கம் 1,200 வீடுகள் பொதுமக்களுக்கு வழங்க வாரியம் திடீர் முடிவு?
முதல்வர் திறந்துவைத்தும் பயனின்றி முடக்கம் 1,200 வீடுகள் பொதுமக்களுக்கு வழங்க வாரியம் திடீர் முடிவு?
ADDED : ஆக 16, 2025 11:59 PM

திருவொற்றியூர் திருவொற்றியூர், கார்கில் நகரில், 190 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 1,200 வீடுகளை, முதல்வர் ஸ்டாலின் திறந்து ஓராண்டாகியும், எந்த பயனாளிகளுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. பயனாளிகள் ஆர்வம் காட்டாததால், அந்த வீடுகளை பொதுமக்களுக்கு வழங்க, வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னையின் பிரதான நீர்வழித்தடமாக விளங்கும் கூவம், அடையாறு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், குடிசை அமைத்து பலரும் வசிக்கின்றனர்.
ஒவ்வொரு பருவமழைக்கும், ஆற்றை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், ஆற்றங்கரையை ஆக்கிரமித்துள்ளோரை அங்கிருந்து அகற்றி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுபோல், கூவம், ஆற்றங்கரையை ஒட்டி வசித்த ஏராளமானோருக்காக, திருவொற்றியூர் மண்டலம் கார்கில் நகரில் 15 ஏக்கர் பரப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி 2018ல் துவங்கியது. 'மைவான்' எனும் ஜெர்மானிய தொழில்நுட்பத்தின்படி, கட்டுமானம் நடந்தது.
வரவேற்பறை, படுக்கை அறை, சமயலறை, குளியலறையுடன் கூடிய கழிப்பறை, மாடம் என, ஒவ்வொரு வீடும் 410 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டது.
தளம் ஒன்றிற்கு 20 வீடுகள் வீதம், 15 தளங்களில், 300 வீடுகள் என, நான்கு தொகுப்புகளாக, 1,200 வீடுகள், 190.88 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டன. தரைத்தளத்தில் வாகன நிறுத்தங்கள், மின்துாக்கி உட்பட பல வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை 23ல், முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக, கார்கில் நகர் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதியை திறந்து வைத்தார்.
ஒரு வீடு 13.93 லட்சம் ரூபாய் எனவும், மத்திய - மாநில அரசு மானியமாக 7.50 லட்சம் ரூபாய் போக, பயனாளி 6.93 லட்சம் ரூபாய் வழங்கினால் வீடு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆற்றங்கரையை ஆக்கிரமித்து குடிசைகளை அகற்றும் பணியை முழுமையாக முடிக்காதது, இடம் பெயர்ந்தால் தங்களுக்கான வேலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போன்ற காரணங்களால், பயனாளிகள் குடியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் திறந்து ஓராண்டாகியும், அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற பயனாளிகள் ஆர்வம் காட்டாததால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மாற்று நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, மறுகுடியமர்வு பயனாளிகளுக்கு பதிலாக பொதுமக்கள் தரப்பில் அழைத்து, வீடுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வீடுகள் கோரி விண்ணப்பித்தால், பயனாளிகள் பங்கீட்டு தொகையை மட்டும் பெற்று, அவர்களுக்கு வீடுகள் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு பருவமழைக்கும், திருவொற்றியூர் கார்கில் நகரில் கழிவெளி புறம்போக்கு நிலத்தில் மழைநீர் தேங்கும். அப்போது, மின் மோட்டார்கள் மூலமாக 'பம்ப்' செய்து, அருகில் உள்ள பகிங்ஹாம் கால்வாயில் மழைநீர் வெளியேற்றப்படும்.
கழிவெளி நிலத்தில், வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர். ஆனாலும் விடாபிடியாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி, கட்டி முடித்து ஓராண்டாகியும் தற்போது வரை எந்த பயனாளிக்கும் வீடு ஒதுக்கப்படவில்லை.
அதனால், ஆற்றங்கரையை ஆக்கிரமித்து குடிசைகளில் வசிப்போருக்காக கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். வீடுகளும் உடனடியாக பயன்பாட்டிற்கு வரும். இல்லையென்றால், ஆண்டுக்கணக்கில் புழக்கம் ஏதுமின்றி, கட்டடம் வீணாகிவிடும்.
எனவே, பொதுமக்களும் வீடுகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என, வாரிய அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை எடுக்கப்படும் அடையாறு, கூவம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால், கார்கில் நகர் அடுக்குமாடி குடியிருப்புகள், யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளன. விரைவில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி