/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாபர்கான்பேட்டை கால்வாயில் பாலம் அமைப்பதால் அப்பாதுரை பகுதிக்கு மழை வெள்ளம் சூழும் அபாயம் திட்டத்தை மாற்றியமைத்து மாநகராட்சி அடாவடி
/
ஜாபர்கான்பேட்டை கால்வாயில் பாலம் அமைப்பதால் அப்பாதுரை பகுதிக்கு மழை வெள்ளம் சூழும் அபாயம் திட்டத்தை மாற்றியமைத்து மாநகராட்சி அடாவடி
ஜாபர்கான்பேட்டை கால்வாயில் பாலம் அமைப்பதால் அப்பாதுரை பகுதிக்கு மழை வெள்ளம் சூழும் அபாயம் திட்டத்தை மாற்றியமைத்து மாநகராட்சி அடாவடி
ஜாபர்கான்பேட்டை கால்வாயில் பாலம் அமைப்பதால் அப்பாதுரை பகுதிக்கு மழை வெள்ளம் சூழும் அபாயம் திட்டத்தை மாற்றியமைத்து மாநகராட்சி அடாவடி
UPDATED : ஆக 01, 2025 10:03 AM
ADDED : ஆக 01, 2025 12:29 AM

ஜாபர்கான்பேட்டைஜாபர்கான்பேட்டை கால்வாயில் 8 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், வி.வி.மாரியம்மன் கோவில் தெரு மக்களுக்கு வசதியாக, அப்பகுதியில் 4 அடி உயரத்தை குறைத்து பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அப்படி பாலம் அமைத்தால், அருகே உள்ள அப்பாதுரை பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், 139வது வார்டு, ஜாபர்கான்பேட்டை கண்ணம்மாள் தெருவில் துவங்கி சுந்தரமூர்த்தி தெரு வரை 600 மீட்டர் துாரத்திற்கு ஜாபர்கான்பேட்டை கால்வாய் செல்கிறது. சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்வாய் துறை பராமரிப்பில் உள்ளது.
ஜாபர்கான்பேட்டை 139வது வார்டு மற்றும் அசோக் நகரில் உள்ள வடிகால்வாயில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜாபர்கான்பேட்டை கால்வாயில் சேர்ந்து, அடையாற்றில் கலக்கிறது.
இந்த கால்வாயில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க, மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு சுவர் கட்டினர். ஆறு ஆண்டுகளுக்கு முன், ஜாபர்கான்பேட்டை அப்பாதுரை தெரு அருகே, தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
மீண்டும் தடுப்புச்சுவர் கட்டாததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. தவிர, தடுப்புச்சுவர் இல்லாததால் மழைக்காலத்தில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானதை அடுத்து, 5.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 250 மீட்டர் துாரத்திற்கு, சாலை மட்டத்தில் இருந்து 8 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் மற்றும் அதற்கு மேல் இரும்பு வேலி அமைக்கும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
Advertisement
இப்பணியை, வி.வி.மாரியம்மன் கோவில் தெரு பகுதிமக்களுக்கு சாதகமாக, புதிதாக கட்டப்படும் கால்வாய் தடுப்புச்சுவர் உயரத்தை குறைத்து, பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மழைக்காலத்தில் தங்கள் குடியிருப்புகளில் மழைநீர் சூழும் அபாயம் இருப்பதாகவும், அப்பாதுரை தெரு பகுதிமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அப்பாதுரை தெரு பகுதிமக்கள் கூறியதாவது:
ஜாபர்கான்பேட்டையின் ஒரு புறம் வி.வி.மாரியம்மன் கோவில் தெரு, மற்றொரு புறம் அப்பாதுரை தெரு உள்ளது. கால்வாயில் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்தபோது, வி.வி.மாரியம்மன் கோவில் தெரு மக்கள் சென்றுவர வசதியாக கால்வாயில் தற்காலிக மரப்பாலம் அமைத்தனர்.
தற்போது, கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சியிடம், புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும் என, வி.வி.மாரியம்மன் கோவில் தெரு மக்கள், ஆளுங்கட்சியினர் வாயிலாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கால்வாயில் சாலை மட்டத்தில் இருந்து எட்டு அடி உயரத்திற்கு அமைக்க வேண்டிய தடுப்புச்சுவரை, அவர்களுக்கு வசதியாக நான்கு அடியாக குறைத்து, அங்கு 10 அடி அகலத்தில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
அப்பகுதியில் ஆளுங்கட்சியினர் அதிகளவில் வசிப்பதால், அவர்களுக்கு சாதகமாக மாநகராட்சி, திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.
இப்பணியால், ஜாபர்கான்பேட்டை மற்றும் அசோக் நகரில் இருந்து இந்த கால்வாயில் வடியும் மழைநீர், தடுப்புச்சுவரின் உயரத்தை குறைத்து பாலம் கட்டும் இடம் வழியாக அப்பாதுரை தெரு பகுதியில் அதிகளவில் வெளியேறி, மழை வெள்ள பாதிப்பு ஏற்படும். தவிர, கால்வாயில் இயந்திரங்களை இறக்கி துார்வாருவதிலும் சிக்கல் ஏற்படும்.
கால்வாய் மீது பாலம் அமைப்பது ஆக்கிரமிப்பு என தெரிந்தும், மாநகராட்சி நிர்வாகம் அடாவடியாக இப்பணியை செய்கிறது.
வி.வி.மாரியம்மன் கோவில் தெருவை ஒட்டி, கால்வாய் துாரத்திற்கு சமமாக 4 அடி அகல அரசு நிலம் உள்ளது. பாலம் அமைப்பதற்கு பதில், இந்த இடத்தில் சாலை அமைத்தால், அப்பகுதிமக்களுக்கு பயனடைவர்; மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.