/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொத்து வரியை உயர்த்தியது மாநகராட்சி மேலும் 6 சதவீதம்! : குப்பை கொட்டினால் அபராதம் ரூ.5,000
/
சொத்து வரியை உயர்த்தியது மாநகராட்சி மேலும் 6 சதவீதம்! : குப்பை கொட்டினால் அபராதம் ரூ.5,000
சொத்து வரியை உயர்த்தியது மாநகராட்சி மேலும் 6 சதவீதம்! : குப்பை கொட்டினால் அபராதம் ரூ.5,000
சொத்து வரியை உயர்த்தியது மாநகராட்சி மேலும் 6 சதவீதம்! : குப்பை கொட்டினால் அபராதம் ரூ.5,000
ADDED : செப் 27, 2024 11:55 PM

சென்னை : சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால், எரித்தால் இனி, 500 ரூபாய்க்கு பதிலாக, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் நிதியாண்டில், சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா, தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசியதாவது:
ராயபுரம், திரு.வி.நகர் மண்டலங்கள் மற்றும் மெரினா கடற்கரையில், 90 இடங்களில், 662 கழிப்பறைகள் கட்டி முடித்து, 3,270 கழிப்பறைகளை பராமரிக்க, 430 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது.
68 தீர்மானம்
அந்நிறுவனம், 50 சதவீதம் புதிய கழிப்பறை கட்டவில்லை. மேலும், முறையாக கழிப்பறையும் பராமரிக்கவில்லை. இதனால், கழிப்பறை பராமரிப்பை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ''சேதமடைந்த கழிப்பறைகள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட உள்ளன,'' என்றார்.
வார்டு 63, கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் பேசுகையில், ''நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைக்குழு உறுப்பினர் பதவியை, சுழற்சி முறையில் வழங்க வேண்டும். சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சில முக்கிய தீர்மானங்கள்:
மாநகராட்சியில், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. வரும், 2025 - 26ம் நிதியாண்டு முதல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் மயான பூமிகளுக்கு உரிமை கட்டணம் மற்றும் அனுமதி வழிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், மயான பூமிக்கு உரிமை கோர ஒரு சென்ட் பரப்புக்கு, 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில், 975 இடங்களில், 7,166 இருக்கைகள் உடைய புதிய கழிப்பறைகள், 11.67 கோடி ரூபாய் மதிப்பில் கட்டவும், சைதாப்பேட்டை மற்றும் அடையாறில், 9 கோடி ரூபாயில், 70 படுக்கையில் கொண்ட நகர்ப்புற சமுதாய மருத்துவமனைகள் கட்டவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள, 291 அம்மா உணவகங்களை, 17 கோடி ரூபாயில் சீரமைக்கவும், 81 இடங்களில் 12 கோடி ரூபாய் மதிப்பில் '3டி மாடல்' நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி, 687 ரூபாயில் இருந்து, 753 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில், 23 தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்; 63 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் குப்பை கொட்டினால், எரித்தால் 500 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம், 110வது வார்டில், காம்தார் நகர் பிரதான சாலையின் பெயரை, திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் சாலை என பெயர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.10 லட்சம் நிதி
மாநகராட்சியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த, 10 லட்சம் ரூபாய் மண்டல மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என, சோழிங்கநல்லுார் மண்டலக்குழு தலைவர் மதியழகன் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே, மண்டல பராமரிப்புக்கு 5 லட்சம் ரூபாய்; இதர பணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது என, மேயர் பிரியா பதிலளித்தார்.
அவற்றை மறுத்த கவுன்சிலர்கள் கூக்குரலிட்டனர். இதனால், ஆவேசமடைந்த மேயர் பிரியா, கமிஷனர் வந்ததும், ஆலோசித்து தீர்வு காண்பதாக தெரிவித்தார்.
சொத்துவரி உயர்வால், ஏற்கனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இரு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சொத்துவரி உயர்த்துவதுடன், அதற்கு மத்திய அரசு தான் காரணம் என கூறுகின்றனர். பொதுமக்கள் பாதிக்கக்கூடிய இதுபோன்ற வரி உயர்வுக்கு, எந்த அரசு காரணமாக இருந்தாலும், அ.தி.மு.க., கண்டிக்கிறது.
கார்த்திக்,
7வது வார்டு கவுன்சிலர், அ.தி.மு.க.,