/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுகள் அஸ்தினாபுரத்தில் அட்டூழியம் செய்யும் மாநகராட்சி
/
கால்வாயில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுகள் அஸ்தினாபுரத்தில் அட்டூழியம் செய்யும் மாநகராட்சி
கால்வாயில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுகள் அஸ்தினாபுரத்தில் அட்டூழியம் செய்யும் மாநகராட்சி
கால்வாயில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுகள் அஸ்தினாபுரத்தில் அட்டூழியம் செய்யும் மாநகராட்சி
ADDED : செப் 04, 2025 03:28 AM

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில், பாதாள சாக்கடை குழாயில் தேங்கியுள்ள கழிவை, மேட்டார் மூலம் இறைத்து, அருகே செல்லும் மழைநீர் கால்வாயில் கலக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகமே இப்படி செய்வதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து, தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், 38வது வார்டு, அஸ்தினாபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாய்களை முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் வழிந்தோடுகிறது.
இந்நிலையில், வினோபாஜி நகர், 11வது தெருவில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. அடைப்பை சரிசெய்வதில் அக்கறை காட்டாத தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தேங்கியுள்ள கழிவுநீரை மோட்டார் மூலம் இறைத்து, அருகே செல்லும் கால்வாயில் விடுகின்றனர்.
மழை காலத்தில், சானடோரியம் பச்சைமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாயில் தான், ஜி.எஸ்.டி., - ரயில்வே லைனை கடந்து, நேரு தெரு, அரிதாஸ்புரம் பிரதான சாலை, திரு.வி.க., நகர் பிரதான சாலை, வினோபாஜி நகர் வழியாக செம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.
அந்த கால்வாயில், பாதாள சாக்கடை கழிவை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றும், மாநகராட்சி 3வது மண்டல அதிகாரிகளின் செயலுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால், நிலத்தடி நீர் மாசடைவதுடன், அப்பகுதி முழுதும் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலர் ரவி, 62, கூறியதாவது:
செம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கு, பசுமை தீர்ப்பாயத்தில் உள்ளது. அப்படியிருக்கையில், மாநகராட்சி நிர்வாகமே பாதாள சாக்கடை கழிவை, மோட்டார் மூலம் இறைத்து மழைநீர் கால்வாயில் விடுகிறது.
அது, அப்படியே செம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. ஏற்கனவே, கழிவுநீர் கலந்து தண்ணீர் நாசமாகிவிட்ட நிலையில், இன்னும் நாசமாகி, ஏரியை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும். அதோடு, மக்களுக்கு தொற்று நோய் பரவும் சூழலையும் மாநகராட்சியே ஏற்படுத்தியுள்ளது.
இவ்விஷயத்தில், மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து, கால்வாயில் பாதாள சாக்கடை கழிவு கலப்பதை தடுப்பதோடு, அதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.