/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல மாதமாக தீராத மின்விளக்கு பிரச்னை ஆலந்துார் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
/
பல மாதமாக தீராத மின்விளக்கு பிரச்னை ஆலந்துார் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
பல மாதமாக தீராத மின்விளக்கு பிரச்னை ஆலந்துார் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
பல மாதமாக தீராத மின்விளக்கு பிரச்னை ஆலந்துார் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : பிப் 10, 2024 12:28 AM

ஆலந்துார், ஆலந்துார் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
பல வார்டுகளில் உள்ள பூங்காக்கள், தெருக்களில் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. பல மின் கம்பங்கள் உடைந்து காணப்படுகின்றன.
மின் வாரியத்தின் சார்பில், எந்த அதிகாரியும் மண்டல குழு கூட்டத்திற்கு வருவதில்லை.
அதனால், அவர்களிடம் நேரடியாக புகார் தெரிவிக்க முடிவதில்லை. நந்தம்பாக்கம் பகுதியில் கொசு மருந்து முறையாக அடிக்காததால், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.
துளிசிங்கபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர, கன்டோன்மென்ட் அனுமதி பெற்று தர வேண்டும். நங்கநல்லுாரில், பல நாட்களாக 'அம்மா' குடிநீர் திட்டம் செயல்படவில்லை.
பல்வேறு மண்டலங்களில் இருந்து கருத்தடை செய்ய அழைத்து வரப்படும் நாய்களை, இங்கு விட்டு செல்வதால் நங்கநல்லுார், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாய் தொல்லை அதிகரித்து உள்ளது.
நங்கநல்லுார் பகுதியில் பட்டா ஆன்-லைன் பதிவேற்றம் செய்ய உரிய மனு அளித்தும், பலரின் மனு ஏற்கப்படவில்லை.
மக்களுக்காக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் புகார்கள், கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
முகலிவாக்கத்தில், பூங்கா சீரமைப்பு பணியை ஒப்பந்ததாரர் பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.
அதை சீரமைக்க வேண்டும். 23 தெருக்களில் குடிநீர் இணைப்பு வேண்டும் என்ற கோரிக்கை, இரு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
மண்டலம் முழுதும் பெரும்பாலான கடைகளில், தமிழ் தவிர மற்ற மொழி பெயர் பலகையே அதிகம் காணப்படுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.