/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரத்தில் மரத்தை வெட்டிய தி.மு.க., நிர்வாகிக்கு கண்டனம்
/
ராயபுரத்தில் மரத்தை வெட்டிய தி.மு.க., நிர்வாகிக்கு கண்டனம்
ராயபுரத்தில் மரத்தை வெட்டிய தி.மு.க., நிர்வாகிக்கு கண்டனம்
ராயபுரத்தில் மரத்தை வெட்டிய தி.மு.க., நிர்வாகிக்கு கண்டனம்
ADDED : பிப் 09, 2025 12:42 AM

சென்னைராயபுரத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் தான் நட்டு வளர்த்த மரத்தை, தி.மு.க., நிர்வாகி வெட்டியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
எம்.எல்.ஏ., என்ற முறையில், கடந்த 2004ல், ராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 15,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து, பராமரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
கடந்த 20 ஆண்டுகளாக, எண்ணற்ற மரங்கள் மக்களுக்கு கோடை காலங்களில் நிழலும், மற்ற நேரங்களில் தூய்மையான காற்றையும் அளித்து வருகின்றன.
ஆனால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு நெருக்கமான நிர்வாகி, மிகப்பெரிய ஒரு மரத்தை காழ்ப்புணர்ச்சியாலும், பணத்திற்காகவும், எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டியுள்ளார். இப்படியொரு செயலை செய்ய, அவருக்கு எப்படி மனம் வந்தது?
இதுபோல், இனியொரு ஒரு மரம் உருவாக, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சிந்தனை, அவருள் எழவில்லையா?
நச்சுக்காற்றை உள்வாங்கி, மூச்சுக்காற்றை கொடுக்கும் மரத்தின் உயிரை எடுத்த அவருக்கு, இயற்கையே பாடம் கற்றுக் கொடுக்கும் என, உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், 'ராயபுரம், சோமு தெரு 2வது சந்தில் உள்ள வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக மரம் இருப்பதால் வெட்ட வேண்டும் என புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், மரம் வெட்டப்பட்டது' என்றனர்.