ADDED : பிப் 11, 2025 01:27 AM
திருவொற்றியூர், ருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாடில், நவீன எரிவாயு தகன மேடை வசதி உட்பட நான்கு சுடுகாடுகள், ஆறு கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி நடக்கிறது.
திருவொற்றியூர் மண்டலத்தில், பட்டினத்தார் சுடுகாடு பழமையானது. இங்கு, இறந்தவரின் உடல் புதைத்தல் மற்றும் விறகு பயன்படுத்தி எரியூட்டும் முறை பயன்பாட்டில் இருந்தது. இதன் காரணமாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு வரப்படும்போது, எரியூட்டுவதற்காக காத்திருக்கும் சூழல் இருந்தது.
இதற்கு தீர்வாக, 2011ம் ஆண்டு, திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாடில், 1.25 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகன மேடை வசதியுடன், சுடுகாடு புனரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது. தற்போதும், பயன்பாட்டில் உள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பால், சுடுகாடின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநகராட்சி சார்பில், பட்டினத்தார் சுடுகாடு வளாகத்தில், 1.50 கோடி ரூபாய் செலவில், மற்றொரு நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதேபோல், நேதாஜி நகர், பெரியகுப்பம், தாழங்குப்பம் சுடுகாடுகளில், தலா, 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகன மேடையுடன் கூடிய வளாகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம், ஆறு கோடி ரூபாய் செலவில், நான்கு எரிவாயு தகனமேடை வசதியுடன் கூடிய சுடுகாடு பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்து விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் என, மண்டல குழு தலைவர் தனியரசு கூறினார்.
மயானம் புனரமைப்பு
காசிமேடு, சூரியநாராயண தெருவில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களுக்கான மயான பூமி உள்ளது. அடிப்படை வசதிகளின்றி, பழமை வாய்ந்த நிலையில் உள்ள மயான பூமிகளை புதுப்பிக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நுழைவாயில், சுற்றுச்சுவர், நடைபாதை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட உள்ளது. இப்பணிக்கு, 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
மாத்துாரில் 'ஜிம்'
மணலி மண்டலம், 19வது வார்டு, மாத்துார் இரண்டாவது பிரதான சாலையில், மாநகராட்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு, மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள், காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூங்கா வளாகத்தில் ஆண், பெண் உடற்பயிற்சிக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
அதைத் தொடர்ந்து, வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 90 லட்சம் செலவில் ஆண்கள் உடற்பயிற்சிக் கூடமும்; சென்னை மேயர் பிரியா அறிவிப்பின்படி, 90 லட்சம் செலவில் பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் என, 1.80 கோடி ரூபாய் செலவில், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடைபெற்றது.