/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை
/
ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை
ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை
ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை
ADDED : பிப் 28, 2024 12:27 AM

செங்குன்றம்,மாதவரம் மூலக்கடை ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரை, 9 கி.மீ., துார மாதவரம் நெடுஞ்சாலை 80 அடி அகலமாக விரிவாக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக 11 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு நிதி ஒதுக்கி பணியை துவக்கியது.
இதில், மூலக்கடை சந்திப்பில் இருந்து, கிராண்ட்லைன் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டிற்கு பின், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பல்வேறு ஆக்கிரமிப்புகளால், இந்த சாலை ஒத்தையடி பாதையாக சுருங்கி போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக உள்ளது.
இதனால், கிராண்ட் லைன், வடகரை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிப்படுகின்றனர். மேலும், கிராண்ட் லைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், விளாங்காடு பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு ஆதி திராவிட நலத்துறை மேல்நிலைப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றில் 5,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தும் கேள்விக்குறியாகி உள்ளது.
அதே போல், செங்குன்றம் ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி எல்லை வரையிலான, சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையும், 4 கி.மீ., துாரத்திற்கு, ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டது.
சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய கிராமங்களின் போக்குவரத்திற்கு உதவும் இந்த சாலை, வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையையும் இணைக்கிறது.
மேற்கண்ட இரண்டு சாலையிலும், 'பேட்ச்' ஒர்க் என்ற பெயரில், 2 மாதத்திற்கு முன், நெடுஞ்சாலைத்துறை ஜல்லி கற்களை கொட்டி சென்றது. ஆனால், இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.
இதனால், சாலையில் சிதறி கிடக்கும் கற்கள், கனரக வாகன டயர்களில் பட்டு, பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும், கனரக போக்குவரத்து அதிகரிப்பால், அப்பகுதி துாசு மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், வீட்டின் கதவு, ஜன்னல்களை எப்போதும் மூடியே வைக்கின்றனர்.
பலர், பிளாஸ்டிக் திரைகளை தடுப்பாக பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுமக்களின் அவதி தொடர்கிறது.

