/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடி மத்திய அரசு தரவில்லை என மேயர் வாதம்
/
மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடி மத்திய அரசு தரவில்லை என மேயர் வாதம்
மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடி மத்திய அரசு தரவில்லை என மேயர் வாதம்
மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடி மத்திய அரசு தரவில்லை என மேயர் வாதம்
ADDED : மார் 21, 2025 11:37 PM

சென்னை சென்னை மாநகராட்சியில், 2025 - 26ம் நிதியாண்டுக்கு, 8,404.70 கோடி ரூபாய் மதிப்பில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 62 புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.
இந்த பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மாதந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
மாநகராட்சி பட்ஜெட் மற்றும் அறிவிப்புகளை, கவுன்சிலர்கள் பலர் வரவேற்று பேசினர். மேலும், கவுன்சிலர் மேம்பாட்டு நிதியை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். துணை மேயர், மண்டல தலைவர்களுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசுகையில், ''பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேபோல், வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு அணிவது கட்டாயம் என்பதை கொண்டு வரும் மாநகராட்சியின் முடிவை வரவேற்கிறோம்,'' என்றார்.
வி.சி., கவுன்சிலர் கோபிநாத் பேசுகையில், ''தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில், பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இப்பணி, மேல்தட்டு மக்களோ, அக்ரஹாரத்தில் இருப்போரோ செய்ய முடியாத பணியாகும்,'' என்றார்.
உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசுகையில், ''தனிப்பட்ட தாக்குதல் கூடாது; நானும் பேசுவேன். அக்ரஹாரத்தை பார்த்து வயிற்று எரிச்சல் ஏற்பட்டால், ஜெலுசில் சாப்பிடுங்கள்,'' என்றார்.
ம.தி.மு.க., கவுன்சிலர் ஜீவன் பேசுகையில், ''நீங்கள் எங்களை பார்த்து காலனி என, அழைப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அக்ரஹாரம் என அழைப்பதை நிறுத்துகிறோம்,'' என்றார்.
இதனால், சிறிது நேரம், சலசலப்பு ஏற்பட்டது.
பின், ம.தி.மு.க., கவுன்சிலர் ஜீவன் பேசியதாவது:
கொடுங்கையூரில் புதிதாக எரிஉலை வர உள்ளதாக தகவல் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்துள்ளோம். ஆமதாபாத், ராஜ்கோட் பகுதிகளில் அமைக்கப்பட்ட எரிஉலையில் அங்குள்ள மக்கள், காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கொடுங்கையூரில் அமைத்து, ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு அமைத்தால், ஸ்டெர்லைட் கதைபோல் ஆகிவிடக்கூடாது. மேலும், மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகளையும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் பிரியா அளித்த பதில்:
கல்லுாரி கட்டுவதற்கு மாநகராட்சி நிதியில் வாய்ப்பு இல்லை. அதற்காக மாநகராட்சி முயற்சித்து வருகிறது. கொடுங்கையூர் எரிஉலை ஆலை தொடர்பாக, பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். கமிஷனர் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த வரவு, செலவு கணக்கிலும், எங்களுக்கு அளிக்கப்பட்ட தெளிவான குறிப்பிலும் மாறுப்பட்ட தொகை வருகிறது. எனவே, மாநகராட்சி வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும்.
அதேபோல், குறைந்த வட்டி செலுத்தும் வகையில், கடன் வாங்க வேண்டும். கடந்தாண்டு, 60,000 ரூபாய் மதிப்பில், பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும் என்றனர். இந்தாண்டில், 84,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓராண்டிற்குள், 24,000 ரூபாய் எப்படி உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு மேயர் பிரியா கூறுகையில், ''வரவு, செலவு கணக்கை, மத்திய அரசு நிதி ஆதாரம் இல்லாமல், தாக்கல் செய்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சி திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு, வரும் மார்ச் 31க்குள், 350 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
''நிதியமைச்சர் சென்னை வந்து நடத்தும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கான நிதியை கேட்டு வாங்கி தாருங்கள்,'' என்றார்.