/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாவட்ட குறுவட்டங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு! பட்டா உள்ளிட்ட சேவை துரிதமாக கிடைக்க வாய்ப்பு
/
சென்னை மாவட்ட குறுவட்டங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு! பட்டா உள்ளிட்ட சேவை துரிதமாக கிடைக்க வாய்ப்பு
சென்னை மாவட்ட குறுவட்டங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு! பட்டா உள்ளிட்ட சேவை துரிதமாக கிடைக்க வாய்ப்பு
சென்னை மாவட்ட குறுவட்டங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு! பட்டா உள்ளிட்ட சேவை துரிதமாக கிடைக்க வாய்ப்பு
ADDED : மே 03, 2025 11:41 PM

கல்வி, இடம்பெயர்வு போன்ற காரணங்களால், சென்னையில் குடியமர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான வருவாய் உள்ளிட்ட சான்றுகள், பட்டா உள்ளிட்ட சேவைகளை உடனுக்குடன் வழங்க, 49 குறுவட்டங்களை 63 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை மாவட்டம், 174 சதுர.கி.மீ., பரப்பில் இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு, சென்னையை ஒட்டி உள்ள, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை இணைத்து, 426 சதுர கி.மீ., பரப்பாக அதிகரித்தது.
சென்னை மாவட்டத்தில், 55 வருவாய் கிராமங்கள் இருந்தன. மூன்று மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 67 வருவாய் கிராமங்கள், 2018ல் சென்னை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன.
பரப்பளவு, மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, கொளத்துார் மற்றும் பள்ளிக்கரணை என, இரண்டு தாலுகாக்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் கொளத்துார் மட்டும், தனி தாலுகாவாக சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு, மறுக்குடியமர்வு என, சென்னை அபார வளர்ச்சி அடைந்து வருவதால், மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இவர்களின், பெரும்பாலான அத்தியாவசிய தேவைகள் வருவாய்த் துறை வழியாக செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, வருமானம், ஜாதி, இருப்பிடம், வாரிசு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட சான்றுகள், பட்டா, உதவித்தொகை உள்ளிட்டவை வருவாய் துறை வழியாக வழங்கப்படுகின்றன. அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, 'பெல்ட்' ஏரியா உட்பட சில வகைப்பாடுகளை, ஆவணங்களில் மாற்ற வேண்டியதாகிறது.
பட்டா கோரும் நிலங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்க வேண்டியதாகிறது.
இப்பணி ஒருபுறம், அத்தியாவசிய சான்றுகள் வழங்குவது ஒருபுறம் என, வருவாய் துறையினருக்கு பணி நெருக்கடி உள்ளது.
இந்நிலையில், இந்த சேவைகளை வழங்கும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளன.
அதனால், பணிச்சுமை அதிகமாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், பயனாளிகள் வழங்கும் விண்ணப்பங்கள் மீது, அவர்களாால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியாமல், மாவட்ட நிர்வாகம் திணறுகிறது.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் நிர்வகிக்கும் வருவாய் குறுவட்டத்தை அதிகரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது சென்னையில் 49 குறுவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், 14 குறுவட்டங்களை புதிதாக உருவாக்கி, 63 குறுவட்டங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வருவாய் துறை சேவைகள் துரிதப்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஆன்லைன்' பட்டா, ஆட்சேபனை இடத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட நாளில் விசாரித்து சான்றிதழ் வழங்குவது, ஆக்கிரமிப்பு இடங்களை அளந்து மீட்பது, இதர அரசு துறைகளின் இடங்களை அளந்து வழங்குவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது போன்ற பணிகளை துரிதமாக செய்ய வேண்டி உள்ளது.
இதில், வருவாய் குறுவட்டங்கள் அதிக பரப்பில் உள்ளதால், பணிகளை உடனுக்குடன் முடிக்க முடியவில்லை. தாமதம் ஏற்படுவதால், மக்களும் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், குறுவட்டங்களை அதிகரித்திருப்பதால், அதற்கு ஏற்ப வருவாய் ஆய்வாளர்களை நியமிக்கும்போது, பணிகள் வேகம் பெறும். மக்களுக்கும் துரித சேவை வழங்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.