/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கையில் கரடி முதியவரால் சலசலப்பு
/
செங்கையில் கரடி முதியவரால் சலசலப்பு
ADDED : டிச 31, 2024 12:32 AM
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதி தட்டான்குளம் அருகே விஸ்வநாதன், 65, என்பவர், நேற்று காலை 7:00 மணி அளவில் தன் நாயுடன் நடைபயிற்சி சென்றுள்ளார்.
அப்போது, அவர் முன்னே சென்ற நாய் பயந்து ஓடியதாகவும், அங்கு, 2 அடி உயரத்தில் கருமை நிற கரடி ஒன்று நாயை துரத்தி விட்டு, வனப்பகுதிக்குள் சென்று மறைந்ததாக, வீட்டில் கூறியுள்ளார். இந்த தகவல், காட்டுத்தீயாக பரவி, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அப்பகுதி ஊராட்சி தலைவர் சரவணன் என்பவர், திருப்போரூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் பொன் செந்தில் உள்ளிட்டோர், அங்கு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் பொன்செந்தில் கூறுகையில், ''வனப்பகுதியில் சென்று ஆய்வு செய்தபோது, கரடி வாழ்வதற்கான அடையாளம் இல்லை. கரடி இருக்கவும் வாய்ப்பு இல்லை. ஆனாலும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.