/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம் மீண்டும் மாறியது; 55.94 சதவீதமே பதிவானதாக புது பட்டியல்
/
3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம் மீண்டும் மாறியது; 55.94 சதவீதமே பதிவானதாக புது பட்டியல்
3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம் மீண்டும் மாறியது; 55.94 சதவீதமே பதிவானதாக புது பட்டியல்
3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம் மீண்டும் மாறியது; 55.94 சதவீதமே பதிவானதாக புது பட்டியல்
UPDATED : ஏப் 22, 2024 07:17 AM
ADDED : ஏப் 22, 2024 01:41 AM

சென்னை மாவட்டத்தின் மூன்று லோக்சபா தொகுதிகளில், 55.94 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் இறுதிப் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நாளன்று வெளியிடப்பட்ட 68.14 சதவீதத்திற்கும், நேற்று வெளியானதில் குறிப்பிட்டுள்ள 55.94 சதவீதத்திற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் ஓட்டுப்பதிவு நடந்துள்ள நிலையில், அவற்றை கணக்கிடுவதில் குளறுபடி நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், பயிற்சியற்ற தேர்தல் அலுவலர்களால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
![]() |
சென்னை மாவட்டத்தில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் நா.த.க., வேட்பாளர் உட்பட 107 போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில், 48.69 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி உடையவர்களாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஓட்டுப்பதிவு நாளில், பல ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுது, மெதுவாக பணி செய்யும் ஊழியர்களால் வாக்காளர்கள், போலீசார் இடையே வாக்குவாதம் நடந்தது.
மேலும், ஒரே வீட்டில் ஐந்து பேரில் ஒன்று, இரண்டு பேருக்கு ஓட்டு இல்லை என தெரியவந்ததால், பல ஓட்டுச்சாவடிகளில் தகராறு ஏற்பட்டது.
பல தேர்தல்களில் ஓட்டளித்து வந்த வாக்காளர்கள், இந்த தேர்தலில், பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது ஒருபுறமிருக்க, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும், மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும், முரண்பாடாக இருந்தது.
ஓட்டுப்பதிவு நாளன்று, சென்னை மாவட்டத்தில், 68.14 சதவீதம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம், மாநில மற்றும் தேர்தல் அதிகாரிகள், சென்னை மாவட்டத்தில் பதிவாக ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட்டனர். அதில், 56.10 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. இது, கடந்த லோக்சபா தேர்தலைவிட, 4 சதவீ தம் குறைவு என அறிய முடிந்தது.
இந்நிலையில் நேற்று, மாவட்ட, மாநில தேர்தல் அதிகாரிகள், ஒரு பட்டியலை வெளியிட்டனர். அதில், சென்னை மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதம், 55.94 என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முந்தைய தேர்தல்களில், உதாரணமாக, ஓட்டுப்பதிவு நாளன்று, 65 சதவீதம் என அறிவித்தால், அடுத்த நாள் இறுதிப்பட்டியல் வெளியிடும்போது, 67, 68 சதவீதம் என ஓட்டுப்பதிவு அதிகரித்து காணப்படும்.
ஆனால் இந்த தேர்தலில், முதலில் 68.14 சதவீதம் எனவும், நேற்று முன்தினம் 56.10 சதவீதம் எனவும், நேற்று 55.94 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இது, வழக்கமான நடைமுறையைவிட மாறாக உள்ளது. இதனால், தேர்தல் கமிஷனின் பணிகளில் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வாக்காளர்கள் கூறியதாவது:
ஓட்டுகள், தகவல் தொழில்நுட்ப இயந்திரங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இதன் விபரங்கள், கணினி வாயிலாக கணக்கிட்டு வெளியிடப்படும்.
கணினி பயன்பாட்டுக்கு முன், பட்டியல் வெளியிடுவதில் தவறு நடப்பது சகஜம்.
தேர்தல் பணிக்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தியும் குளறுபடி ஏற்படுவது, தேர்தல் கமிஷனின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் கமிஷன் நம்பகத்தன்மையுடன் செயல்படுவது மிக முக்கியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]() |
தேர்தல் பணியில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த சில ஊழியர்கள் கூறியதாவது:
சில ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, போதிய அனுபவம் இல்லை. ஏற்கனவே பணிபுரிந்த ஊழியர்கள், மூன்று நாள் பயிற்சி பெற்றும், முறையாக ஓட்டுப்பதிவை கையாள முடியாமல் திணறினர்.
ஓட்டுப்பதிவு குறித்த விபரத்தை, மேல் அதிகாரிகளிடம் கூறியதில் காலதாமதம், கடைசி நேர பதிவை கணக்கிட்டு மொத்தமாக தெரிவித்ததில் குளறுபடி போன்ற காரணங்களால், முழுமையான பட்டியல் வெளிவரவில்லை.
சட்டசபை தொகுதியில் சில உதவி தேர்தல் அலுவலர்கள், ஊழியர்களின் அலட்சியம் காரணமாக இருந்தது.
அதனாலேயே, சென்னை மாவட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடுவில் குழப்பம் ஏற்பட்டது. இது போன்ற குளறுபடிகள், அடுத்த தேர்தலில் ஏற்படாத வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் --


