/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சார்ஜிங்' மையங்கள் அமைக்க 'டெண்டர்' கோரியது மின் துறை
/
'சார்ஜிங்' மையங்கள் அமைக்க 'டெண்டர்' கோரியது மின் துறை
'சார்ஜிங்' மையங்கள் அமைக்க 'டெண்டர்' கோரியது மின் துறை
'சார்ஜிங்' மையங்கள் அமைக்க 'டெண்டர்' கோரியது மின் துறை
ADDED : ஆக 10, 2025 12:13 AM
சென்னை,சென்னையில் பெசன்ட் நகர், மயிலாப்பூர் உட்பட ஒன்பது இடங்களில், மின் வாகனங்களுக்கு 'சார்ஜிங்' மையங்களை அமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்து, 'டெண்டர்' கோரியுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும், மின் வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த வாகனங்களுக்கு, தடையின்றி எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ., துாரத்துக்கும் ஒன்று, முக்கிய நகரங்களில் மூன்று கி.மீ., துாரத்துக்கு ஒன்று என்ற வகையில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றை அமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அதன்படி, தமிழகம் முழுதும், 500 சார்ஜிங் மையங்களை அமைக்க, மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக சென்னையின் சில இடங்களில் சார்ஜிங் மையங்களை, தன் செலவில் அமைத்து, இயக்க தனியார் நிறுவனங்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்து, 'டெண்டர்' கோரியுள்ளது. இதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை மின் வாரியம், சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும்.
எங்கெங்கு அமைகின்றன?
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங், பெசன்ட்நகர் கடற்கரை பார்க்கிங், மெரினா கடற்கரை, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, முகப்பேர் மங்கல் ஏரி பார்க்கிங், 133வது வார்டு மாநகராட்சி விளையாட்டு பூங்கா மற்றும் சோமசுந்தரம் பூங்கா, 102வது வார்டு பூங்கா ஆகிய இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.