/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உஸ்மான் சாலை மேம்பாலத்தை மூடுவதில் சிக்கல் தீபாவளிக்குள் முடியுமா தி.நகர் மேம்பால பணி?
/
உஸ்மான் சாலை மேம்பாலத்தை மூடுவதில் சிக்கல் தீபாவளிக்குள் முடியுமா தி.நகர் மேம்பால பணி?
உஸ்மான் சாலை மேம்பாலத்தை மூடுவதில் சிக்கல் தீபாவளிக்குள் முடியுமா தி.நகர் மேம்பால பணி?
உஸ்மான் சாலை மேம்பாலத்தை மூடுவதில் சிக்கல் தீபாவளிக்குள் முடியுமா தி.நகர் மேம்பால பணி?
ADDED : பிப் 13, 2024 12:20 AM

தி.நகர், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை, ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் மதிப்பீடில் மேம்பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது.
இதில், தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, 131 கோடி ரூபாய் செலவில் 50 துாண்களுடன் 7.5 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக புது மேம்பாலம் அமைக்க, கடந்தாண்டு மார்ச்சில் பணிகள் துவங்கின.
தி.நகர், துரைசாமி சாலை -- உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
தி.நகரில், எந்நேரமும் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகம் உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க, சென்னையில் முதல்முறையாக இரும்பு மற்றும் கான்கிரீட் கலவை கலந்து 'காம்போசைட் கர்டர்' முறையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மூன்று கட்டம்
போக்குவரத்து பிரச்னை ஏற்படாமல் இருக்க, மூன்று கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டன. இதில், தெற்கு -- மேற்கு போக் சாலை சந்திப்பில் இருந்து, சி.ஐ.டி., நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பு வரை, 320 மீ., துாரத்திற்கு முதல் கட்டமாக முடிக்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக, தெற்கு ---மேற்கு போக் சாலை சந்திப்பில் இருந்து பர்கிட் சாலை சந்திப்பு வரை, 465 மீ., துாரத்திற்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மூன்றாம் கட்டமாக, பர்கிட் சாலை சந்திப்பில் இருந்து பழைய உஸ்மான் சாலை மேம்பாலம் வரை, 420 மீ., துாரத்திற்கு, மூன்றாம் கட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இதில், 50 துாண்களில் 22 துாண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், பழைய உஸ்மான் சாலை மேம்பால சாய்தளத்தை உடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சந்தேகம்
ஆனால், அதிகளவில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் உள்ள இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதால், போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், மேம்பால பணிகளை, திட்டமிட்டபடி இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கி, மேம்பாலத்தை மூட வேண்டும். மேம்பால சாய் தளத்தை இடிக்கவும் அங்குள்ள குடிநீர் வாரிய குழாய்களை மாற்றி அமைக்கவும், மூன்று மாதங்கள் தேவைப்படும். அதற்குபின் தான் மேம்பாலத்தை இணைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியும்' என்றனர்.