/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு சாலையில் உயரமான வடிகால் மழைநீர் வெளியேறுவதில் தொடரும் சிக்கல்
/
அடையாறு சாலையில் உயரமான வடிகால் மழைநீர் வெளியேறுவதில் தொடரும் சிக்கல்
அடையாறு சாலையில் உயரமான வடிகால் மழைநீர் வெளியேறுவதில் தொடரும் சிக்கல்
அடையாறு சாலையில் உயரமான வடிகால் மழைநீர் வெளியேறுவதில் தொடரும் சிக்கல்
ADDED : டிச 23, 2024 01:00 AM

அடையாறு:அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகரில், 30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இங்குள்ள வடிகால்களில் சேரும் மழைநீர், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக, எல்.பி., சாலையில் 400 மீட்டர் துாரம் சென்று, மீண்டும் 173வது வார்டு, இந்திரா நகர் 1 மற்றும் 2வது அவென்யூ வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.
கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி உள்ள, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் இந்திரா நகர் 1, 2வது அவென்யூவில் உள்ள வடிகால்கள், நீரோட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த வடிகால்களை விட, வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி, எல்.பி., சாலையில் உள்ள வடிகால், ஒரு அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், சாஸ்திரி நகரில் இருந்து எல்.பி., சாலையில், வெள்ளம் சீராக வடிந்து செல்லாமல், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் குறுக்கு தெருக்களில் தேங்குகிறது.
கனமழையின்போது பாதிப்பு அதிகரிப்பதால், சாஸ்திரி நகர், 1வது அவென்யூவில் மோட்டார் வைத்து, 150 மீட்டர் நீள குழாய் வழியாக, மழைநீரை இறைத்து எல்.பி., சாலை வடிகாலில் விடப்படுகிது.
இது தற்காலிக தீர்வு மட்டுமே. நிரந்தர தீர்வு காண, சாஸ்திரி நகரில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை, சீராக நீரோட்டம் செல்லும் வகையில் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சாஸ்திரி நகர், பெசன்ட் நகரை விட, பகிங்ஹாம் கால்வாய் சற்று சாய்வாக, இயல்பான நீரோட்ட பாதையில் உள்ளது. அதற்கு ஏற்ப வடிகால் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள எல்.பி., சாலையில் வடிகால் கட்டும்போது, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, இந்திரா நகர் 1, 2வது அவென்யூவில் உள்ள வடிகால்களை கணக்கில் கொள்ளாமல் கட்டியதால், வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
எல்.பி., சாலை, 70, 80 அடி அகலமாக உள்ளது. இதை விரைவில், 100 அடி அகலமாக விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அப்போது, நீரோட்டத்தை கணக்கில் கொண்டு வடிகால் கட்டப்படும்.
அதுவரை, வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வடிகாலில் இருந்து, எல்.பி., சாலை வடிகாலில் மோட்டார் வாயிலாக மழைநீர் இறைத்து வெளியேற்றும் நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

