/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை குடிநீர் ஏரிகளை நவீனப்படுத்தும் திட்டம் இழுபறி!
/
சென்னை குடிநீர் ஏரிகளை நவீனப்படுத்தும் திட்டம் இழுபறி!
சென்னை குடிநீர் ஏரிகளை நவீனப்படுத்தும் திட்டம் இழுபறி!
சென்னை குடிநீர் ஏரிகளை நவீனப்படுத்தும் திட்டம் இழுபறி!
ADDED : ஆக 18, 2024 12:14 AM

சென்னை, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளின் கண்காணிப்பு மற்றும் உபரி நீர் திறப்பை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு, 32 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்த பிறகும், பணிகள் இழுபறியாக உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதில், தேர்வாய் கண்டிகை ஏரிக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்கு ஷட்டர்கள் இல்லை. ஏரி நிரம்பும் போது, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி, கால்வாய் வழியாக சென்றுவிடுகிறது.
மற்ற ஏரிகளில் உபரிநீரை வெளியேற்றுவதற்கு ஷட்டர்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது. அதன் அளவை முறையாக கண்காணித்து, உபரிநீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
அத்தகைய காலங்களில் தொலைதொடர்பு துண்டிப்பு, சிக்னல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், முறையாக திட்டமிட முடியாத நிலை ஏற்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இரவில், அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால், பெரும் சேதம் ஏற்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வரும் காலங்களில் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க, நான்கு ஏரிகளை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது.
இதற்காக ஆஸ்திரேலியா நாட்டில், நீர்நிலைகளை கண்காணிக்கும் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து, நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்கள் செயற்கைக்கோள் வழியாக கண்காணிக்கப்பட உள்ளன.
பல்வேறு ஆறுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறை தலைமை அலுவலகம் அல்லது திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து, ஏரிகளின் ஷட்டர்கள், மொபைல்போன் செயலி வழியாக இயக்கப்பட உள்ளன.
இதனால், உபரிநீரை தேவையான அளவில் திறந்து, வெள்ள சேதத்தை தவிர்க்க முடியும். அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா மாவட்டங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில், வெண்ணாறு, காவிரி உள்ளிட்ட ஆறுகளில், ரெகுலேட்டர்களில், இதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இதேபோல, புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் கருவிகளை பொருத்துவதற்கு, 32 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கி ஐந்து மாதங்களுக்கு முன், அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இப்பணிகளை துவங்குவதற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்தன. ஒப்பந்ததாரர் தேர்வும் துவங்கியது. ஆனால், திடீரென ஒப்பந்ததாரர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு, திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரிகளை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு 'ஸ்கேடா' என்ற ஆஸ்திரேலிய தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் கட்டமைப்பு மற்றும் கருவிகள் பொருத்துதல் என, இரண்டு வகையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழக மின்ஆளுமை முகமை வழிகாட்டுதல்படி, இதற்கான கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டி உள்ளதால், ஒப்பந்ததாரர் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன காரணம்?
சென்னை குடிநீர் ஏரிகளை நவீனப்படுத்தும் திட்டத்தை, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் வாயிலாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு, பணியில் இருந்து ஒரு அதிகாரி, ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டார். இவர் வாயிலாக, ஒப்பந்ததாரர் தேர்வு நடந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து, இதற்கான கருவிகளை கொள்முதல் செய்து பொருத்த, ஒரு நிறுவனத்திடம் பேசி முடிக்கப்பட்டது.
ஆனால், அந்த அதிகாரி ஓய்வுப்பெற்று சென்றபின், இப்பிரிவிற்கு புதிய அதிகாரி நியமிக்காமல், மற்றொரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர்தான் ஒப்பந்ததாரர் தேர்வை ரத்து செய்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகள், தற்போது இந்தியாவிலேயே தயாராகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால், செலவு குறையும் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக, ஒரு நிறுவனத்துடன் பேச்சு நடந்து வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்குவதற்குள், இத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.