/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டே நாளில் சரிந்து விழுந்த மழைநீர் வடிகால்வாய் சுவர்
/
இரண்டே நாளில் சரிந்து விழுந்த மழைநீர் வடிகால்வாய் சுவர்
இரண்டே நாளில் சரிந்து விழுந்த மழைநீர் வடிகால்வாய் சுவர்
இரண்டே நாளில் சரிந்து விழுந்த மழைநீர் வடிகால்வாய் சுவர்
ADDED : செப் 22, 2025 03:11 AM

திருவேற்காடு: திருவேற்காடு அருகே கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாயின் பக்கவாட்டு சுவர், இரண்டே நாளில் உடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவேற்காடு, சுந்தரசோழபுரம் 2வது வார்டு, சக்தி கருமாரி அம்மன் தெருவில், 60 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், குண்டும் குழியுமாக மாறியது.
கடந்த 17 ம் தேதி அதிகாலை கனமழை பெய்தபோது, வடிகால்வாயின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. கட்டப்பட்ட இரண்டே நாளில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, வி.சி., 2வது வார்டு கவுன்சிலர் ஆஷா கூறுகையில், ''மழைநீர் வடிகால்வாய் பணியின்போது பக்கவாட்டு சுவர் அமைக்க பயன்படுத்தப்பட்ட பலகைகள், கடந்த 16ம் தேதி பிரிக்கப்பட்டன. மறுநாள் நள்ளிரவு கனரக வாகனம் ஒன்று அந்த தெருவில் சென்றுள்ளது. அப்போது, ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, சுவர் சரிந்து விழுந்துள்ளது,'' என்றார்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ''வடிகால்வாய் பணியை வி.சி., திருவள்ளூர் மாவட்ட செயலர் ஆதவன் மேற்கொண்டு வருகிறார். ஒன்றரை மாதமாக பணி நடந்து வருகிறது. கால்வாய் தரமாக அமைக்கப்படாததால், வடிகால்வாய் சுவர் சரிந்து விழுந்துள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
இது குறித்து, திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ராமனிடம் கேட்டபோது 'ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.