/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தத்தளித்த ஆலந்துார் மண்டலம் சுரங்க பாலங்கள் நீரில் மூழ்கின
/
தத்தளித்த ஆலந்துார் மண்டலம் சுரங்க பாலங்கள் நீரில் மூழ்கின
தத்தளித்த ஆலந்துார் மண்டலம் சுரங்க பாலங்கள் நீரில் மூழ்கின
தத்தளித்த ஆலந்துார் மண்டலம் சுரங்க பாலங்கள் நீரில் மூழ்கின
ADDED : டிச 13, 2024 12:06 AM

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் மழைநீர் வடிகால் பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. ஆனால், இணைப்புகள் முறையாக வழங்கப்படாததால், ஆலந்துார், நங்கநல்லுார், பழவந்தாங்கல், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள், இந்த மழைக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
நங்கநல்லுாரில் 27, 28வது தெருக்கள், 46வது தெரு, ஆறாவது சாலை மழைநீரில் மிதந்தன. ஆதம்பாக்கம், 165வது வார்டு திருவள்ளுவர் நகர், சாஸ்திரி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளின் பல தெருக்களில் மழைநீர் தேங்கியது.
வீராங்கால் ஓடை முழுதும் மழைநீர் வடிந்தோடுகிறது. தொடர் மழை பெய்யும்பட்சத்தில், அப்பகுதிவாசிகள் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படலாம். பழவந்தாங்கல், பூந்தோட்டம் பகுதி, கனமழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முகலிவாக்கத்தில் ஆறுமுகம் நகர், குமுதம் நகர், சரோஜினி தெரு, வி.ஜி.என்., லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில், மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜி.எஸ்.டி., சாலை, பழவந்தாங்கல், நங்கநல்லுார் ஆகியவற்றை இணைக்கும் பழவந்தாங்கல் பாலம், வழக்கம் போல மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல, கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாலமும் நீரில் மூழ்கியது.
மேலும், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில், அதிகப்படியாக தேங்கிய மழைநீர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்பட்டது. ஆனால், அத்திட்டம் முழுமையடையாததால், பம்பிங் ஸ்டேஷன் பகுதிகளில் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தியது.
கனமழை காரணமாக, மீனம்பாக்கம், விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா வரை ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், குறிப்பிட்ட இடத்தை கடக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.
- -நமது நிருபர் -