/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறை வடிவ மனித கொலு பள்ளி மாணவியர் அசத்தல்
/
இறை வடிவ மனித கொலு பள்ளி மாணவியர் அசத்தல்
ADDED : செப் 30, 2025 02:09 AM

பெரம்பூர், பெரம்பூரில் பள்ளி மாணவியரின் மனித கொலு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் விதவிதமான கொலு வைக்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவியர் கடவுள் வேடம் தரித்து தத்ரூபமாக காட்சியளித்த கொலு கண்காட்சி, பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெரு பகுதியில் உள்ள சரஸ்வதி கலா கேந்திரா நாட்டிய பள்ளியில் நடந்தது.
இதில் கைலாயத்தில் சிவன், பார்வதி, விநாயகர் முருகன் ஆகியோர் வீற்றிருக்கும் வகையிலும், ராமன் சீதை வனகாட்சி, பராசக்தி, மகாலட்சுமி, காமாட்சி, மீனாட்சி, சிறுவயது மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு இறை வடிவங்களில் மாணவியர் கொலுவாக வீற்றிருந்தனர்.
இது குறித்து நாட்டிய பள்ளி நிறுவனர் மற்றும் ஆசிரியை கிரண்மயி கூறுகையில், ''ஆன்மிகத்தை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இறை வடிவத்தில் மனித கொலு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் பல்வேறு வரலாற்று விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும்,'' என்றார்.