/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழுதி மண்டலமாக மாறிய சாலை வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபம்
/
புழுதி மண்டலமாக மாறிய சாலை வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபம்
புழுதி மண்டலமாக மாறிய சாலை வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபம்
புழுதி மண்டலமாக மாறிய சாலை வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபம்
ADDED : ஆக 04, 2025 04:24 AM

திருவொற்றியூர்:செம்மண் புழுதி மண்டலமாக மாறிய பொன்னேரி நெடுஞ்சாலையில், செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள், உயிர்பலி அபாயத்தில் தினசரி பயணித்து வருகின்றனர்.
மணலி - வைக்காடு சந்திப்பு துவங்கி, மணலிபுதுநகர் அடுத்த நாப்பாளையம் மேம்பாலம் வரை, 5 கி.மீ., துாரத்திற்கு இரு அணுகுசாலை, பிரதான சாலைகளுடன் கூடிய பொன்னேரி நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையை ஒட்டியே, ஏராளமான கன்டெய்னர் சரக்கு பெட்டக முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கனரக போக்குவரத்து அதிகம் இருக்கும்.
அதன்படி, பொன்னேரி நெடுஞ்சாலையின், வைக்காடு சந்திப்பு - ஆண்டார்குப்பம் சந்திப்பு வரையிலான அணுகு சாலை, செம்மண் புழுதியாய் காட்சியளிக்கிறது.
இங்கு அமைந்துள்ள கன்டெய்னர் சரக்கு பெட்டக முனையங்கள், செம்மண் பூமியில் அமைந்துள்ளது.
அங்கிருந்து வெளியேறும் டிரைலர், கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்களால், அணுகு சாலை முழுதும் செம்மண் படிந்து, அந்த சாலையை பைக், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது.
தவிர, அணுகு சாலையில் அதிவேகமாய் பயணிக்கும் கனரக வாகனங்களால் கிளம்பும் புழுதி, பிரதான சாலையில் பயணிப்பவர்களையும் பதம் பார்க்கிறது. முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு எழும்பும் செம்மண் புழுதியால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இந்த புழுதியால், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. அணுகு சாலையில் அனுமதியின்றி நிறுத்தியிருக்கும் கன்டெய்னர் லாரிகளை, புழுதி மறைப்பதால் விபத்தில் சிக்கும் நிலைமையும் உள்ளது.
எனவே, விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செம்மண் புழுதி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.