/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு இரும்பு குழாய் அமைக்கும் பணி துவக்கம்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு இரும்பு குழாய் அமைக்கும் பணி துவக்கம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு இரும்பு குழாய் அமைக்கும் பணி துவக்கம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு இரும்பு குழாய் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 08, 2024 12:31 PM
மதுரவாயல், மதுரவாயல், 147வது வார்டில், பல ஆண்டுகளாக தொடர்ந்த குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வாக, 3.5 கி.மீ., துாரத்திற்கு, 2.4 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக இரும்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
சென்னை, வளசரவாக்கம் மண்டலம், கடந்த 2011ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
விரிவாக்கப்பட்ட மண்டலம் என்பதால், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பல்வேறு வார்டுகளில் இன்னும் முழுமை பெறவில்லை.
இதில், மதுரவாயல் 146, 147 ஆகிய வார்டுகளில், 2012 - 2016ல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்ட பின், கடந்த 2018ம் ஆண்டு முதல், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
பாதாள சாக்கடை
மதுரவாயல் 146, 147 ஆகிய வார்டுகளில் 2011ம் ஆண்டு, 50 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
பாதாள சாக்கடை திட்ட பணிகள், 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், தனி நபர் தொடர்ந்த வழக்கால், ஆறு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.
வழக்கு முடிவிற்கு வந்த நிலையில், கடந்த 2018ல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டன.
பாதாள சாக்கடை திட்ட பணிகளின் போதும், பிற சேவை துறைகள் மேற்கொண்ட பணிகளாலும், 147 மற்றும் 146வது வார்டில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
கழிவுநீர் கலப்பு
இதனால், 146 மற்றும் 147வது வார்டுகளில் குடிநீரில், கழிவு நீர் கலந்தது. இதனால், பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடிக்கவும், முழுமையாக தடுக்கவும் முடியாமல் குடிநீர் வாரியம் திணறியது.
இதையடுத்து, தெருக்களில் குடிநீர் தொட்டி அமைத்து, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, மதுரவாயல் பகுதியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரவாயல் பகுதி முழுதும், குடிநீர் குழாயை மாற்றி அமைக்க, பல கோடி ரூபாய் தேவைப்படும் என்பதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
ரோபோட் கேமரா
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு குடிநீர் குழாயில், ரோபோட் கேமரா செலுத்தி, எந்த இடத்தில் கழிவு நீர் கலக்கிறது என கண்டுபிடிக்கும் பணி, ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் அறிக்கையை பொறுத்து, குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்தது.
இதில், முதற்கட்டமாக மதுரவாயல் 146 மற்றும் 147வது வார்டுகளில், தலா 3.75 கி.மீ., துாரத்திற்கு 9 கோடி ரூபாய் செலவில், டி.ஐ., குழாய் எனப்படும் இரும்பு குழாய் அமைக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்தது.
இந்நிலையில், மதுரவாயல் 147வது வார்டு, ஸ்ரீ தேவி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 3.5 கி.மீ., துாரத்திற்கு, 2.4 கோடி ரூபாய் மதிப்பில், இரும்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணியை, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மதுரவாயல் 147வது வார்டில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணியை, மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அதுவரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில், குடிநீர் லாரியில் தண்ணீர் வழங்கப்படும். தொடர்ந்து 146வது வார்டில், குடிநீர் குழாயை மாற்றி அமைக்க ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
ஒப்புதல் கிடைத்ததும், அந்த வார்டிலும் குடிநீர் குழாய் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

