/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை வெள்ளத்தில் விளையாட்டு வளாகம் மூழ்கும்?அபாயம்! : பகிங்ஹாம் கரையில் பசுமை பூங்கா திட்டமும் வீண்
/
மழை வெள்ளத்தில் விளையாட்டு வளாகம் மூழ்கும்?அபாயம்! : பகிங்ஹாம் கரையில் பசுமை பூங்கா திட்டமும் வீண்
மழை வெள்ளத்தில் விளையாட்டு வளாகம் மூழ்கும்?அபாயம்! : பகிங்ஹாம் கரையில் பசுமை பூங்கா திட்டமும் வீண்
மழை வெள்ளத்தில் விளையாட்டு வளாகம் மூழ்கும்?அபாயம்! : பகிங்ஹாம் கரையில் பசுமை பூங்கா திட்டமும் வீண்
ADDED : ஆக 12, 2024 04:05 AM

ஆர்.கே.நகர்:கொருக்குப்பேட்டையில், 10 கோடி ரூபாயில் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவின் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், பகிங்ஹாம் கால்வாய் வெள்ளத்தால் கைவிடப்பட்டது. பகிங்ஹாம் கால்வாயில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆர்.கே.நகரில் 10 கோடி ரூபாயில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு வளாகத்தின் நிலையும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கொருக்குப்பேட்டை, பாரதி நகர், 6வது தெருவில், 10 கோடி ரூபாய் செலவில், 5 ஏக்கர் பரப்பளவில் பகிங்ஹாம் கால்வாயையொட்டி, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி, மாநகராட்சி சார்பில் 2017ல் துவக்கப்பட்டது.
இதில் 1 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம், குளம், அதன் கரையில் மிதிவண்டி பாதை, நடைபாதைகள் அமைக்கப்பட்டன.
வெள்ளம்
கடந்த 2017 ஜனவரியில் துவங்கி வேகமாக நடந்து, 90 சதவீதம் பணிகள் முடிந்தன. இந்நிலையில், திடீரென சுற்றுச்சூழல் பூங்கா பணி நிறுத்தப்பட்டது.
காரணம், பகிங்ஹாம் கால்வாயையொட்டி அமைக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் பூங்கா, மழைக்காலங்களில் வெள்ள நீரால் மூழ்கும் அபாயம் எழுந்தது. கால்வாய் நிரம்பி வெள்ளம் பாய்ந்தால், பூங்கா முற்றிலும் சேதமடையும்.
தவிர, பூங்காவின் அருகே பகிங்ஹாம் கால்வாய் செல்வதால், நிலத்தடி நீரில் சாக்கடை கலந்து கடும் துர்நாற்றம் வீசியது. இந்த தண்ணீரை பூங்காவிற்கு பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, பூங்காவை பராமரிக்க தண்ணீர் வசதியும் இல்லாத சூழல் ஏற்பட்டது. இந்த விளைவுகளால், கடந்த 2018ல் இந்த சுற்றுச்சூழல் பூங்கா திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது.
பின், பூங்கா புதர்மண்டி ஆடு, மாடுகள் மேயும் இடமாக மாறியது. பூங்காவில் இருந்த செடிகள், கம்பிகள், டைல்ஸ் கற்கள், மின்விளக்குகள் திருடு போயுள்ளன. இதனால், அரசுக்கு 10 கோடி ரூபாய் பணம் வீணானது.
பின், தி.மு.க., ஆட்சிக்குவந்தபின், இந்த சுற்றுச்சூழல் பூங்கா, நீரேற்று நிலையமாக மாற்றப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கொருக்குப்பேட்டை பாரதி நகரில், 19.41 கோடி ரூபாயில், இந்த குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகரில் சுண்ணாம்பு கால்வாய், மணலி சாலையில், 10 கோடி ரூபாயில், 4 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023 நவம்பரில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, இந்த விளையாட்டு மைதான கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த வளாகத்தில், கிரிக்கெட், கபடி பயிற்சி மையம், ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்துடன், குத்துச்சண்டை, இறகுப்பந்து விளையாட்டு அரங்கங்கள், ஓடுதளம், சறுக்கு விளையாட்டிற்கான தளம், குழந்தைகளுக்கான விளையாட்டு கூடமும் அமைய உள்ளன.
மேலும் கேரம், செஸ், கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பாட்டம், குத்துச்சண்டை, கபடி உள்ளிட்ட உள்விளையாட்டு அரங்கங்களும் அமைய உள்ளன. 3,000 பேர் அமரும் வகையில் பெரிய ஆடிட்டோரியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,
பகிங்ஹாம் கால்வாய், மூலக்கொத்தளத்தில் இருந்து எண்ணுார் வரை செல்கிறது. தற்போது 10 கோடியில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு வளாகம் அருகிலும், பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது.
கடந்தாண்டு மழையின்போது, பகிங்ஹாம் கால்வாய் நிறைந்து, அருகிலுள்ள இடங்களில் வெள்ளம் புகுந்தது. தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்த பிரமாண்ட விளையாட்டு வளாகம் உள்ள பகுதியும் வெள்ளநீரில் மூழ்கியது.
7 அடி சுற்றுச்சுவர்
எனவே, மழைக்காலத்தின் போது வெள்ள நீர், விளையாட்டு வளாகத்தில் உட்புகுவதை தடுக்கும் வகையில், உரிய கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, 41வது வார்டு கவுன்சிலர் விமலா கூறியதாவது:
ஒருநாள் மழைக்கே பகிங்ஹாம் கால்வாய் நிரம்பும் நிலையில், பருவமழையின் போது, பெரும் பாதிப்பு ஏற்படும். பகிங்ஹாம் கால்வாயில், 7 அடிக்கு சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும்.
மேலும், பிரமாண்ட விளையாட்டு வளாகம் உள்ளே மழைநீர் வடிகால்கள் அமைத்தால், மழைநீர் புகுவதை தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்டலக் குழு தலைவர்நேதாஜி கணேசன் கூறுகையில், ''பகிங்ஹாம் கால்வாயில், 6 அடிக்கு சேறு உள்ளது. ஒரு அடிக்கு தண்ணீர் செல்கிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் துார்வாரி, தண்ணீர் செல்ல வழிவகை செய்தால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என்றார்.
ஏற்கனவே 10 கோடியில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணிகள் வெள்ள அபாயத்தால் நிறுத்தப்பட்டது.
தற்போது, 10 கோடி ரூபாயில், பகிங்ஹாம் கால்வாய் அருகே பிரமாண்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பணியும் கைவிடப்படும் நிலை உருவாகி உள்ளதாக அப்பகுதியினர் கருதுகின்றனர்.