/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதம்பாக்கம் முதல் மெரினா வரை ஒரே நாளில் தொடர் பைக் திருட்டு துரத்திய போலீசுக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'
/
ஆதம்பாக்கம் முதல் மெரினா வரை ஒரே நாளில் தொடர் பைக் திருட்டு துரத்திய போலீசுக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'
ஆதம்பாக்கம் முதல் மெரினா வரை ஒரே நாளில் தொடர் பைக் திருட்டு துரத்திய போலீசுக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'
ஆதம்பாக்கம் முதல் மெரினா வரை ஒரே நாளில் தொடர் பைக் திருட்டு துரத்திய போலீசுக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'
ADDED : நவ 06, 2025 02:59 AM
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் முதல் மெரினா வரை பல்வேறு இடங்களில், நேற்று ஒரே நாளில் தொடர்ந்து பைக் திருடியவர், மனநல காப்பகத்தில் இருந்து மாயமான நபர் என்பது தெரிய வந்ததை அடுத்து, துரத்தி சென்ற போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆதம்பாக்கம், ஆபீசர் காலனியைச் சேர்ந்தவர் மாதேஷ், 26. இவர், நேற்று முன்தினம் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், பிருந்தாவன் நகர் பிரதான சாலையில் காய்கறி வாங்க சென்றார்.
அப்போது, அவரை வழிமறித்த நபர் மாதேஷை மிரட்டி, ஸ்கூட்டரை பறித்து சென்றார். இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை துவக்கினர்.
அடுத்த சில மணி நேரங்களில், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி என, சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன.
பதறியடித்த போலீசார், வாகனங்கள் திருட்டுபோன இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அனைத்து இடங்களிலும் ஒரே நபர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவர் ஒரு இடத்தில் இருந்து திருடிய இருசக்கர வாகனத்தை மற்றொரு இடத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து மற்றொரு வாகனத்தை திருடி செல்வதையும் தொடர்ந்து செய்துள்ளார்.
அந்தவகையில், கடைசியாக திருடிய வாகனத்தை, வேளச்சேரி ரயில் நிலையத்தில் விட்டு, மேம்பால ரயிலில் ஏறி செல்வது தெரிய வந்தது.
புகைப்படத்தை வைத்து, போலீசாரும் அவரை பின் தொடர்ந்தனர். இதில், மெரினாவில் சுற்றித்திரிவது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, முன்னுக்குபின் முரணாக உளறினார். அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அர்மேந்தர் என்பர் பேசினார்.
பிடிபட்டது தன் சகோதரர் பாவேந்தர், 30, என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம், சேட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் போலீசாரிடம் கூறினார்.
குடிப்பழக்கத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட பாவேந்தர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மூன்று நாட்களுக்கு முன் அங்கிருந்து மாயமானதும் தெரியவந்தது.
இதையடுத்து, அர்மேந்தரை சென்னைக்கு வரவழைத்த போலீசார், அவரிடம் பாவேந்தரை ஒப்படைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

