/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு! சீல்' வைக்க முடியாமல் சி.எம்.டி.ஏ., திணறல்
/
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு! சீல்' வைக்க முடியாமல் சி.எம்.டி.ஏ., திணறல்
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு! சீல்' வைக்க முடியாமல் சி.எம்.டி.ஏ., திணறல்
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு! சீல்' வைக்க முடியாமல் சி.எம்.டி.ஏ., திணறல்
UPDATED : மே 27, 2025 06:06 AM
ADDED : மே 26, 2025 10:39 PM

சென்னை :சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாரித்துள்ளனர். 'சீல்' வைக்கும் நடவடிக்கைக்கு தயாரான நிலையில், துறையின் உயர் மட்டத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக, சென்னை பெருநகரில் புதிய கட்டடங்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. நகர், ஊரமைப்பு சட்டப்படி அனுமதி பெற்றுதான் இந்த கட்டடங்களை கட்ட வேண்டும்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கட்டுமான நிறுவனங்கள் அனுமதி பெற்றாலும், பணிகள் நிலையில் விதிமீறல்கள் அதிகரிகின்றன.
இந்நிலையில், விதிமீறல் கட்டடங்கள் குறித்து கடிதங்கள், இ - மெயில் மட்டுமின்றி, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
இதன்படி அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ.,வில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு மூத்த திட்ட அலுவலர் தலைமையிலான இப்பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்து, 'சீல்' வைக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை, இப்பிரிவு அதிகாரிகள் கிடப்பில் போடுவதையே வாடிக்கையாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், சமீப காலமாக விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் கிடுக்கிபிடி உத்தரவுகளை பிறப்பிப்பதால், அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து, அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்த பட்டியல் நீண்டு வரும் நிலையில், அண்ணா சாலை, அடையாறு, அண்ணா நகர், அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட கட்டடங்களில் அதிகபட்ச விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு உரிய முறையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், 'நோட்டீஸ்' அளித்தனர்.
இதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடங்களை பட்டியலிட்டு, 'சீல்' வைப்பதற்கு அதிகாரிகள் தயாராகினர். ஆனால், கடைசி நிமிடத்தில், நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
துறை மேலிட அழுத்தம் காரணமாக, விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், விதிமீறல் கட்டடங்கள், சென்னையில் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டட விதிமீறல்களை தடுக்க வேண்டிய அதிகாரிகளை தடுக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
லஞ்சமே காரணம்
இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
விதிமீறல் கட்டடங்கள் குறித்த புகார்கள் மீது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பெரும்பாலான இடங்களில், ஒரு அடி கூட பக்கவாட்டு காலியிடம் விடாமல் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து புகார் அளித்தால், கவுன்சிலர் முதல் பல்வேறு நிலைகளில் அரசியல்வாதிகளின் அழுத்தம் ஏற்படுகிறது. இவர்களின் வசூல் வேட்டைக்காக, சீல் வைக்கும் பணிகள் முடக்கப்படுகின்றன.
சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் பணிகளை தடுக்கும் மேலிடத்தை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் இது விஷயத்தில் நீதிமன்றம் தலையிடும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.