/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டுகள் அகற்றாவிட்டால் வெள்ளம் சூழும் அபாயம்
/
விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டுகள் அகற்றாவிட்டால் வெள்ளம் சூழும் அபாயம்
விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டுகள் அகற்றாவிட்டால் வெள்ளம் சூழும் அபாயம்
விருகம்பாக்கம் கால்வாயில் மண் திட்டுகள் அகற்றாவிட்டால் வெள்ளம் சூழும் அபாயம்
ADDED : ஜூலை 21, 2025 03:20 AM

விருகம்பாக்கம்,:விருகம்பாக்கம் கால்வாயை துார்வாராததால் மண் திட்டுகள் உருவாகி, மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றத்தில் துவங்கும் விருகம்பாக்கம் கால்வாய், விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், மேத்தா நகர் வழியாக, நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே கூவம் ஆற்றில் சேர்கிறது. மொத்தம் 6.3 கி.மீ., துாரம் உடைய இந்த கால்வாய், நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ளது.
முறையாக துார்வாரி பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் நிறைந்துள்ளன. இதனால், கால்வாயில் தண்ணீர் சீராக செல்ல வழியின்றி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் வழியாக தண்ணீர் ஏறி, குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னை தொடர்வதால், விருகம்பாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள், பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்தாண்டு பருவமழைக்கு முன், விருகம்பாக்கம் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
பகுதிமக்கள் கூறியதாவது:
மோசமான நிலையில் இருந்த கால்வாய், கடந்த ஆண்டு செப்., மாதம், 75 லட்சம் ரூபாயில் துார்வாரி சீரமைக்கப்பட்டது. அப்போது, துார்வாரிய ஆகாயத்தாமரை மற்றும் குப்பை கழிவுகள், கால்வாயோரம் குவிக்கப்பட்டன. அவ்வப்போது பெய்த மழையின்போது, குப்பை கழிவுகள் கால்வாயினுள் விழுந்து, மண் திட்டுகளாக மாறிவிட்டன.
கால்வாய் பராமரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கும் மாநகராட்சி நிர்வாகம், விருகம்பாக்கம் கால்வாயை முறையாக துார்வாரி, சேறு மற்றும் சகதியை அப்புறப்படுத்தினால் மட்டுமே, வரும் பருவமழைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது.
அப்படி செய்யவில்லை என்றால், இந்தாண்டும் நீரோட்டம் தடைபட்டு விருகம்பாக்கம் கால்வாய் தண்ணீர், மழைநீர் வடிகால்வாய் வழியாக குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.