/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எந்த குறையுமில்லை; பேச விரும்பவில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் புதுவித எதிர்ப்பா?
/
எந்த குறையுமில்லை; பேச விரும்பவில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் புதுவித எதிர்ப்பா?
எந்த குறையுமில்லை; பேச விரும்பவில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் புதுவித எதிர்ப்பா?
எந்த குறையுமில்லை; பேச விரும்பவில்லை தி.மு.க., கவுன்சிலர்கள் புதுவித எதிர்ப்பா?
ADDED : பிப் 21, 2024 02:20 AM
வளசரவாக்கம்,:வளசரவாக்கம் மண்டல குழு கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர், 'எங்களுக்கு எந்த குறையுமில்லை; பேச விரும்பவில்லை' என தெரிவித்தனர். இது, புதுவிதமான எதிர்ப்பா என, அதிகாரிகள் முணுமுணுத்தனர்.
சென்னை, வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் ராஜன் தலைமையில், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில், நேற்று நடந்தது.
இதில், 153வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி ராமலிங்கம் பேசியதாவது:
ஏரியா சபை கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தால், அவர்கள் திருப்தியாக இருப்பர். எனவே, அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போரூரில் உள்ள சமூக நலக்கூடத்தை சீர்செய்ய வேண்டும் என, பல கூட்டத்தில் பேசி விட்டேன். இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்தியநாதன் பேசியதாவது:
நெற்குன்றம் சுடுகாடு அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் பொதுக் கழிப்பறை கட்ட வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இங்கு கழிப்பறை கட்ட, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்து நான்கு மாதங்கள் கடந்தும், இன்னும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், வார்டில் உள்ள சுகாதார மையத்தில் மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின், புதிய மருத்துவரை இன்னும் நியமனம் செய்யவில்லை. அந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.
மருத்துவர் இல்லை என்றால், மண்டலத்தில் உள்ள மண்டல நல அதிகாரி மருத்துவர், வாரத்தில் சில நாட்கள் இந்த மருத்துவமனையில் வந்து பணி செய்யலாம்.
வார்டில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட 60 மழைநீர் வடிகால்கள், இன்னும் புனரமைக்கப்படாமல் உள்ளன. அவற்றை விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லவன் நகரில் உள்ள பள்ளியைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த பள்ளியைச் சுற்றி உள்ள 25 குடும்பங்களுக்கு அதுதான் வழியாக உள்ளது.
சுற்றுச்சுவர் அமைக்கும் முன், அவர்கள் வந்து செல்ல வழி ஏற்பாடு செய்ய வேண்டும்.
என் வார்டில் பணிபுரிந்து வரும் உதவிப் பொறியாளரை இடமாற்றம் செய்ய, செயற்பொறியாளர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான காரணம் தெரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த மண்டல குழு தலைவர் ராஜன்,''அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கவுன்சிலர்களிடம் கேட்க வேண்டியதில்லை. இடமாற்றம் செய்ய வேண்டாம் என்றால், கடிதம் அளியுங்கள்,'' என தெரிவித்தார்.
இதில், 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன் பேசுகையில், ''நிறைய குறைகள் உள்ளன; பேச விரும்பவில்லை,'' என்றார்.
இதேபோல், கூட்டத்தில் பங்கேற்ற 144வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், 150வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா, 151 வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், 154வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார், 155வது வார்டு கவுன்சிலர் ராஜூ ஆகிய தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேரும், 'எங்களுக்கு எந்த குறையும் இல்லை; பேச விரும்பவில்லை' என தெரிவித்தனர்.
தொடர்ந்து விவாதம் நடந்தது.

