/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை ஒப்பந்ததாரர் தேர்வு திடீரென தள்ளிவைப்பு
/
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை ஒப்பந்ததாரர் தேர்வு திடீரென தள்ளிவைப்பு
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை ஒப்பந்ததாரர் தேர்வு திடீரென தள்ளிவைப்பு
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை ஒப்பந்ததாரர் தேர்வு திடீரென தள்ளிவைப்பு
ADDED : நவ 08, 2025 02:41 AM
சென்னை: திருவான்மியூர் - உத்தண்டி இடையிலான மேம்பால சாலை திட்டத்திற்கான ஒப்பந்ததாரர் தேர்வு, திடீரென தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அக்கரை முதல் புதுச்சேரி வரை, சாலையை ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
திருவான்மியூர் - உத்தண்டி வரை, 14.2 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க, மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால், 15 நிமிடங்களில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி செல்ல முடியும்.
இந்த திட்டத்திற்கு, தமிழக அரசு 2,100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கட்டுமான பணியை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை, ஆகஸ்ட் மாதம் மாநில நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர், நேற்று திறக்கப்பட இருந்தது. திடீரென, வரும் 13ம் தேதிக்கு டெண்டர் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திற்கு, டெண்டர் திறப்புக்கு முன்பே பணி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாகவே, டெண்டர் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மாநில நெடுஞ்சாலை ஆணையம் மறுத்துள்ளது.
இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி கூறியதாவது:
திருவான்மியூர் - உத்தண்டி வரையிலான உயர்மட்ட மேம்பால சாலை திட்டம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்திற்கான நிதியை, தனியார் 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்கும்.
தனியார் நிறுவனம் செலவழித்த தொகை, கட்டுமான பணிகள் முடிந்தபின் படிப்படியாக வழங்கப்படும். முதல் முறையாக, இந்த முறையில் நெடுஞ்சாலை ஆணையத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஒப்பந்ததாரர் தேர்வில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள், இ - மெயில் வாயிலாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதற்கு பதில் அளிப்பதற்காக, ஒப்பந்ததாரர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனம், பின்னாளில் சந்தேகங்களை எழுப்பி, அரைகுறையாக பணிகளை நிறுத்தாமல் இருப்பதற்காகவே, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

