ADDED : டிச 01, 2024 01:32 AM

சென்னை:'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னையில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து, மூவர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் சந்தன், 20. இவர் பிராட்வே, செம்புதாஸ் தெருவில் தங்கி, மண்ணடியிலுள்ள ஹார்டுவேர்ஸ் கடைகளில் லோடுமேனாக பணிபுரிந்தார்.
அவர் அப்பகுதியில் உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,மில் நேற்று பணம் எடுக்கச் சென்றார். வாசலிலுள்ள இரும்பு கம்பியைப் பிடித்து ஏற முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து இறந்தார். முத்தியால்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வேளச்சேரி: வேளச்சேரி, ராம்நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 45. இவர் குடிநீர், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார்.
நேற்று மாலை வேளச்சேரி, விஜயாநகர் 2வது பிரதான சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, மின்கம்பி அறுந்து, விழுந்ததில் இறந்தார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொளத்துார்: கொளத்துார், திருப்பதி நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் இசைவாணன், 24. மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தொடர் மழை காரணமாக பெரம்பூர் - புளியந்தோப்பு இடையே உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில், இசைவாணன் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை 5:00 மணியளவில் மழைநீரை அகற்ற, ஜெனரேட்டரை இயக்கியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, இசைவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.5 லட்சம்
இந்நிலையில், வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி இறந்த சக்திவேல் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு மின்வாரியம் சார்பில், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

