/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.என்.ஜி., 'காஸ்' லாரியை அனுமதிக்க கோரி தமிழக அரசுக்கு 'டோரண்ட்' நிறுவனம் கடிதம்
/
சி.என்.ஜி., 'காஸ்' லாரியை அனுமதிக்க கோரி தமிழக அரசுக்கு 'டோரண்ட்' நிறுவனம் கடிதம்
சி.என்.ஜி., 'காஸ்' லாரியை அனுமதிக்க கோரி தமிழக அரசுக்கு 'டோரண்ட்' நிறுவனம் கடிதம்
சி.என்.ஜி., 'காஸ்' லாரியை அனுமதிக்க கோரி தமிழக அரசுக்கு 'டோரண்ட்' நிறுவனம் கடிதம்
UPDATED : ஜூலை 10, 2025 12:29 PM
ADDED : ஜூலை 10, 2025 12:14 AM

சென்னை,சென்னையில் சி.என்.ஜி., எரிவாயு எடுத்து செல்லும் லாரிகளை, கட்டுப்பாடின்றி காலை, மாலை வேளைகளில் அனுமதிக்குமாறு, அரசுக்கு, 'டோரண்ட்' நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணுார் துறைமுக வளாகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி., எனும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து, கப்பலில் எல்.என்.ஜி., எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இந்த எரிவாயு, வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், பி.என்.ஜி., எனும், 'பைப்டு நேச்சுரல் காஸ்' பெயரிலும், வாகனங்களுக்கு சி.என்.ஜி., இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுதும் இந்த எரிவாயுவை வினியோகம் செய்ய, ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் திருவள்ளூரில் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்யும் பணியை, 'டோரண்ட் காஸ்' என்ற தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனம், தினமும் 150 லாரிகளில் மணலி, திருவொற்றியூர், கோயம்பேடு, திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, மதுரவாயல், பாடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள, 77 சி.என்.ஜி., மையங்களுக்கு வினியோகம் செய்கிறது. அவற்றின் மூலம், வாகனங்களுக்கு சி.என்.ஜி., எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் லாரிகள் செல்ல அனுமதிப்பதில்லை.
இதனால், சி.என்.ஜி., எரிவாயு எடுத்து வருவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சி.என்.ஜி., மையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன.
எனவே, சிறப்பு அனுமதியின் கீழ் சி.என்.ஜி., எரிவாயு எடுத்துச் செல்லும் லாரிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இயற்கை எரிவாயு வினியோக பணிக்கு முகமையான, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குனர், சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் உள்ளிட்டோருக்கு, டோரண்ட் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.