/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிற்சங்கங்கள் போராட்டம் அண்ணா சாலையில் நெரிசல்
/
தொழிற்சங்கங்கள் போராட்டம் அண்ணா சாலையில் நெரிசல்
ADDED : ஜூலை 10, 2025 12:10 AM

சென்னை,விலைவாசி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., - தொ.மு.ச., உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் நேற்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
அண்ணா சாலை தாராபூர் அருகே, நேற்று காலை நடந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்ற அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலை மட்டுமின்றி பின்னி சாலை, கிரீம்ஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை, ஆதித்தனார் சாலை உள்ளிட்ட சாலைகளிலும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதேபோல், அம்பத்துார் சி.டி.எச்., சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோரால், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் முதல் திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர் வரை 5 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.
வடசென்னை மார்க்.கம்யூ., கட்சி சார்பில், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவொற்றியூர் - சுங்கசாவடி சந்திப்பில் ஒன்றுக்கூடிய, சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், பேருந்துகளில் ஏற முடியாமல் பயணியர் மிகவும் சிரமப்பட்டனர். கோயம்பேடில் இருந்து கிண்டி நோக்கி வந்த மாநகர பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன.
அந்தந்த பகுதிகளில், பணியில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களை வேனில் ஏற்றி, அருகில் உள்ள மண்டபங்களில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.