/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யானைகவுனி மேம்பாலம் திறந்தும் குறையாத போக்குவரத்து நெரிசல்
/
யானைகவுனி மேம்பாலம் திறந்தும் குறையாத போக்குவரத்து நெரிசல்
யானைகவுனி மேம்பாலம் திறந்தும் குறையாத போக்குவரத்து நெரிசல்
யானைகவுனி மேம்பாலம் திறந்தும் குறையாத போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 23, 2025 12:48 AM

மூலக்கொத்தளம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் வால்டாக்ஸ் சாலையில் பழமையான யானைகவுனி மேம்பாலம் உள்ளது. 1933ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், சிதிலமடைந்து காணப்பட்டதால், 2016ல் பாலம் மூடப்பட்டது.
புதிய மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டு, 2020ல், பழமையான பாலம் இடித்து அகற்றப்பட்டது. 2020ம் ஆண்டு, ஆகஸ்டில் 79.78 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
கட்டுமான பணிகள் முடிந்து, எட்டு ஆண்டுகளுக்குபின், 2024, மார்ச்சில் யானைகவுனி மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.
வாகனங்கள் மூலக்கொத்தளம் வழியாக செல்வதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைகின்றனர். பேசின் பாலம் துவங்கி வியாசர்பாடி பாலம் வரை, 1.5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், காலை, மாலை நேரங்களில் வடசென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பேசின் மேம்பாலத்தில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். யானைகவுனி மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
மூலக்கொத்தளத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுமக்களிடம் பெறப்பட்ட தொடர் புகார்களை அடுத்து சமீபத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வியாசர்பாடி, மின்ட், வால்டாக்ஸ் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மீண்டும் போக்குவரத்து பழையபடி மாற்றப்பட்டது.
தற்போது, கொருக்குப்பேட்டை, எழில் நகர் மேம்பால பணியும்; வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால பணியும் நடந்து வருவதால் அனைத்து வாகனங்களும் மூலக்கொத்தளம் வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கொருக்குப்பேட்டை, எழில் நகர் மற்றும் வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்ததும், யானைகவுனி மேம்பால போக்குவரத்து மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.