UPDATED : அக் 13, 2026 09:03 PM
ADDED : அக் 13, 2026 08:58 PM
சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில், ராஜஸ்தானில் இருந்து சென்னை வழியாக மதுரை செல்லும் அனுரத் விரைவு ரயில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலர் செழியன் தலைமையில் வந்த 80 பேர் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த எழும்பூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
இந்த போராட்டத்தால், அனுரத் விரைவு ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
