/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுதல் பாதை இல்லாததால் கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்
/
கூடுதல் பாதை இல்லாததால் கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்
கூடுதல் பாதை இல்லாததால் கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்
கூடுதல் பாதை இல்லாததால் கும்மிடி தடத்தில் ரயில்கள் தாமதம்
ADDED : ஏப் 10, 2025 11:43 PM
சென்னை, சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில், கூடுதல் ரயில் பாதைகள் இல்லாததால், தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை, ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் இயக்கப்படும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் இருக்கின்றன.
ஆனால், சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும்போதெல்லாம், மின்சார ரயில்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், இந்த தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் சூலுார்பேட்டை தடத்தில் தினமும் 120க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சீராக அவற்றை இயக்குவதில்லை. இதனால், தினமும் 45 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
விரைவு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில் பேசின்பிரிட்ஜ், திருவொற்றியூர், மீஞ்சூர், எண்ணுார் ஆகிய இடங்களில் திடீரென நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், தினமும் வேலைக்கு செல்வோர், விரைவு ரயில்களை பிடிக்க சென்ட்ரலுக்கு வருவோர் அவதிப்படுகின்றனர்.
சென்ட்ரல் - அத்திப்பட்டு வரை உள்ள கூடுதல் ரயில் பாதைகளை, கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும். அப்போது தான், விரைவு, சரக்கு, மின்சார ரயில்கள் தாமதம் இன்றி இயக்கலாம்.
இது குறித்து, முறை கோரிக்கை மனு அளித்தும், ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.