/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மூத்த தமிழ் மொழியை தான் பழங்குடியினர் பேசுகின்றனர்'
/
'மூத்த தமிழ் மொழியை தான் பழங்குடியினர் பேசுகின்றனர்'
'மூத்த தமிழ் மொழியை தான் பழங்குடியினர் பேசுகின்றனர்'
'மூத்த தமிழ் மொழியை தான் பழங்குடியினர் பேசுகின்றனர்'
ADDED : ஜன 07, 2024 12:29 AM

இருளர் பழங்குடிகளின் மொழியில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியவர் லட்சுமணன். அவர், பழங்குடியினர் சார்ந்த செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
'ஒடியன்' லட்சுமணன்?
பள்ளி காலத்தில், வீதி நாடகத்தில் நடிக்க பழங்குடியினரை தேடினேன். அப்போது அவர்களின் வாழ்வியல் பற்றிய புரிதல் ஏற்பட்டது; அவர்களை அறிவதில் ஆர்வமாக இருந்தேன்.
அதனால், அவர்களின் மொழியை கற்று, அவர்களின் மொழியிலேயே கவிதை எழுதும் வரை சென்றது. என் முதல் கவிதை நுாலின் தலைப்பே, பெயருடன் ஒட்டிக்கொண்டது.
நமக்கும், அவர்களுக்கும் வித்தியா சம்?
கோவை, முள்ளாங்காடு என்ற பகுதியில், பால் கலக்காத தேநீர் கொடுத்தனர். ஆனாலும், கறவை மாடுகள் வளர்த்தனர். விசாரித்தால், 'மாட்டின் பால் கன்றுக்கானது; அதை குடிப்பது தர்மம் ஆகாது' என்றனர். பூனைப்பதி என்ற கிராமத்தில், கணவரை இழந்த ஒரு இளம்பெண் கழுத்தில் தாலி போன்ற மணி அணிந்திருந்தார்.
அவர், 'என் அப்பா கொடுத்த மணிகளைத் தான் அணிந்துள்ளேன். என் கணவர் கட்டிய கருகமணியை அணிவதில்லை. என் கணவரையும் காயப்படுத்தக் கூடாது; என் தகப்பனுக்கும் உரிய மரியாதை தர வேண்டும் அல்லவா' என்றார். இப்படி, அவர்களின் இயற்கை பற்றிய புரிதலுக்கும், நம் புரிதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
பழங்குடியின பாடல் தொகுப்பது ஏன்?
நம் வரலாற்றை அறிய நிறைய கல்வெட்டுகள், செப்பேடுகள், சிலைகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளன. அவர்களின் பாரம்பரியத்தை அறிய உதவும் ஒரே சான்று பாடல்கள் தான். அவற்றில் தான், அவர்களின் பாரம்பரியம், வலி, மகிழ்ச்சி எல்லாவற்றையும் பொதித்துள்ளனர். அவர்களின் வாழ்வியலை அறிய வேண்டும் என்பதற்காகவே, அவர்களின் பாடல்களை தொகுக்கிறேன்.
எத்தனை பழங்குடியினரிடம் பழக்கம்?
இருளர், தோடர், கோத்தர், பளியர், காட்டு நாயக்கர் என, 36 வகை பழங்குடியினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வழிபாடு எப்படி?
பழங்குடியினரிடத்தில் முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லை. முன்னோரின் நினைவாக துணிகள், சாம்பல் உள்ளிட்டவற்றை ஒரு மடத்தில், அதாவது தனி அறை அல்லது குடிசையில் வைத்து, புனிதமாக பாதுகாப்பர். அங்கு வழிபட்ட பின் தான், எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்குவர்.
அவர்கள் பாடல் பாடும் தருணங்கள்?
அனைவரும் ஒன்றாக கூடும், அதாவது திருமணம், பேய் ஓட்டுதல், இறப்பு உள்ளிட்ட தருணங்களில் பாரம்பரிய பாடல்களை பாடுவர். தவில், பறை, பீக்கி, கொகால் உள்ளிட்ட இசைக்கருவியை இசைப்பர். சிறிய நாதஸ்வரம் அல்லது முகவீணை போன்ற இசைக்கருவியை வாசிக்கின்றனர்; பாடலின் விறுவிறுப்பை கூட்டுவர் அல்லது குறைப்பர். ஒவ்வொரு பழங்குடி குழுவிலும், இந்த இசைக்கருவிகளுக்கு பெயர்கள் வெவ்வேறு என்றாலும், பெரும்பாலும் ஒத்திருக்கும்.
தமிழ், பழங்குடி மொழி ஒற்றுமை?
தமிழில் யுவன், யுவனி என்பது போல் ஊனன், ஊனி என்ற வார்த்தை அங்குள்ளது. அம்மே என்றால் அப்பா என்றும், தாய் என்பதே அம்மா என்பதும் ஆச்சர்யமூட்டும். இப்படி, நம் வளர்ந்த தமிழ் மொழியின் முன்வடிவாகவே அது தோன்றும்.
பழங்குடி மொழி சேகரிப்பு எப்படி?
தமிழ் நன்கு தெரிந்த பழங்குடி குழந்தைகளை, பெரியோரிடம் கதை கேட்டு வந்து சொல்ல சொல்கிறோம். பழங்குடி மொழியில் உள்ள வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை எழுதி, நாங்கள் வைக்கும் 'மொழிப்பெட்டி'யில் போடும்படி சொல்கிறோம். அவற்றில் கிடைக்கும் சொற்களை தொகுத்து, அகராதி உருவாக்குகிறோம்.
அடுத்த படைப்பு?
அவர்களின் பாடல்களை தற்போது ஆல்பமாக்கி உள்ளேன். அடுத்து, ஆவணப்படம் எடுக்கும் முயற்சிகளிலும் இறங்கி உள்ளோம். பழங்குடியினர் குழந்தைகள் படித்த சமூகமாக மாற்ற, அனைத்து சட்ட உதவிகளையும் செய்கிறோம்.
- நமது நிருபர் --