/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திவாக்கம் தாமரைக்குளம் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்தில் அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
/
கத்திவாக்கம் தாமரைக்குளம் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்தில் அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
கத்திவாக்கம் தாமரைக்குளம் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்தில் அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
கத்திவாக்கம் தாமரைக்குளம் ஆக்கிரமிப்பு ஒரு மாதத்தில் அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : டிச 14, 2024 02:41 AM
சென்னை, கத்திவாக்கம் தாமரைக்குளம் ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும் என, சென்னை மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'சென்னை, எண்ணுார், கத்திவாக்கத்தில், 5.32 ஏக்கர் பரப்பில் இருந்த தாமரைக்குளம், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், தொழில் நிறுவனங்களால், 2 ஏக்கராக சுருங்கியுள்ளது.
குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீர் விடப்படுவதாலும் மாசடைந்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துாய்மைப்படுத்தி தாமரைக்குளத்தை மீட்டெடுக்க வேண்டும்' என, தியாகராஜன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த தீர்ப்பாயம், 'தாமரைக்குளத்தை பராமரித்து வரும் சென்னை மாநகராட்சி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
மீண்டும் இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'கத்திவாக்கம் தாமரைக்குளத்தில், 52 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, 21 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள 31 ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு மாத அவகாசம் தேவை' என, சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், 1.36 கோடி ரூபாய் மதிப்பில், தாமரைக்குளம் சீரமைக்கும் பணிகளை முடிக்க முடியவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், சீரமைப்பு பணிகளை ஒப்பந்ததாரரால் தொடர முடியாது. எனவே, கத்திவாக்கம் தாமரைக்குளத்தில் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்றி, சீரமைப்பு பணிகள் தொடர, சென்னை மாநகராட்சி வழி செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி, 30ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

