/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் ஏர்போர்ட் வந்த அமெரிக்கரின் பயணம் ரத்து
/
தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் ஏர்போர்ட் வந்த அமெரிக்கரின் பயணம் ரத்து
தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் ஏர்போர்ட் வந்த அமெரிக்கரின் பயணம் ரத்து
தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் ஏர்போர்ட் வந்த அமெரிக்கரின் பயணம் ரத்து
ADDED : நவ 04, 2024 04:29 AM

சென்னை:இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற, அமெரிக்க நபரின் பயணத்தை ரத்த செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 11:50 மணியளவில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த விமானத்தில் பயணிக்க வந்தவர்களையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது, அமெரிக்காவை சேர்ந்த டேவிட், 55 என்பவரிடம், சேட்டிலைட் போன் இருந்தது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியாவில் சாட்டிலைட் போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், வெளிநாட்டு பயணியர் சேட்டிலைட் போன் எடுத்து வந்தால், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அதை வாங்கி வைத்து ரசீது கொடுப்பர். பின், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பயணி திரும்பி செல்லும்போது, சேட்டிலைட் போனை அவரிடம் ஒப்படைத்து விடுவர்.
ஆனால், டேவிட் தடையை மீறி, சேட்டிலைட் போனை வைத்து இருந்ததால், அதை பறிமுதல் செய்து, அவரது பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், டேவிட் கூறியாவது:
சில தினங்களுக்குமுன், அமெரிக்காவில் இருந்து டில்லி விமான நிலையம் வந்தேன். அங்கிருந்து, விமானத்தில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றேன். அந்தமானில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில் சென்னை வந்தேன்.
எங்கள் நாட்டில், சேட்டிலைட் போன் பயன்படுத்த தடை இல்லை. அதனால், அங்கிருந்து வந்தபோது, சேட்டிலைட் போனை எடுத்து வந்தேன். ஆனால், இந்தியாவில் மற்ற விமான நிலையங்களில், சேட்டிலைட் போன் குறித்து என்னிடம் யாரிடம் கேட்கவும் இல்லை; தடுக்கவும் இல்லை.
சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்தான், நான் சிங்கப்பூர் செல்ல இருந்ததை தடுத்து, சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டேவிட் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததால், அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.