/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1,000 கோடி நன்கொடை பெற்று தருவதாக மோசடி முதியவரை கடத்திய அறக்கட்டளை நிர்வாகி கைது
/
ரூ.1,000 கோடி நன்கொடை பெற்று தருவதாக மோசடி முதியவரை கடத்திய அறக்கட்டளை நிர்வாகி கைது
ரூ.1,000 கோடி நன்கொடை பெற்று தருவதாக மோசடி முதியவரை கடத்திய அறக்கட்டளை நிர்வாகி கைது
ரூ.1,000 கோடி நன்கொடை பெற்று தருவதாக மோசடி முதியவரை கடத்திய அறக்கட்டளை நிர்வாகி கைது
ADDED : ஏப் 21, 2025 02:48 AM

அண்ணா நகர்:துபாயில் இருந்து, 1,000 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுத் தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்ற விவகாரத்தில், முதியவரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த, அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.
அண்ணா நகரை சேர்ந்த எட்வின், 60, அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:
வேளச்சேரியில் செயல்பட்டு வரும் 'தன்வந்திரி' அறக்கட்டளை நிர்வாகிகள், தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கினர்.
வீட்டு பத்திரம் மற்றும் மனைவி நகைகளை தரும்படி மிரட்டினர். கொலை மிரட்டல் விடுத்து, என் வங்கி காசோலையில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, அறக்கட்டளை நிர்வாகி அமீனுதீனை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
எட்வினுக்கு, மும்பையைச் சேர்ந்த சப்தரிஷி பானர்ஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, 'ஏதாவது அறக்கட்டளைக்கு நிதி உதவி வேண்டும் என்றால் கூறுங்கள். துபாயில் உள்ள நிறுவனங்களில் இருந்து, நன்கொடை பெற்றுத் தருகிறேன்' என, சப்தரிஷி பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய எட்வின், வேளச்சேரியில் உள்ள தன்வந்திரி அறக்கட்டளை நிர்வாகிகளை, சப்தரிஷி பானர்ஜிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அவர், அறக்கட்டளைக்கு 1,000 கோடி ரூபாய் நன்கொடை பெற்று தருவதற்காக, கமிஷன் தொகையாக 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
கமிஷன் தொகை பெற்று பல மாதங்கள் ஆகியும், துபாயிலிருந்து, 1,000 கோடி ரூபாய் நன்கொடை வராததால், அறக்கட்டளை நிர்வாகிகள், சப்தரிஷி பானர்ஜியை அறிமுகம் செய்து வைத்த எட்வினை விசாரித்துள்ளனர்.
'அறிமுகம் செய்ததோடு சரி. நிதி வராதது பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறியுள்ளார்.
இதில் அதிருப்தியடைந்த அவர்கள், எட்வினை காரில் கடத்தி, சரமாரியாக தாக்கி, அவரது கையெழுத்திடப்பட்ட வங்கி காசோலைகளை பெற்றுள்ளனர். பணம் வரவில்லை என்றால், அவரது வீட்டு பத்திரம் மற்றும் மனைவி அணிந்திருக்கும் நகைகளை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். எட்வினை கடத்தியது தன்வந்திரி அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் வைஷ்ணவி, மொய்தீன் மற்றும் அமீனுதீன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அமீனுதீன் என்பவரை கைது செய்தோம். தலைமறைவாக உள்ள அறக்கட்டளையின் பெண் நிர்வாகி உள்ளிட்ட இருவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.