/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் மெட்ரோ வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
/
கொளத்துாரில் மெட்ரோ வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
கொளத்துாரில் மெட்ரோ வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
கொளத்துாரில் மெட்ரோ வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
ADDED : பிப் 20, 2025 12:16 AM

சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 47 கி.மீ., துாரத்திற்கு, வழித்தட பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம் பால்பண்ணை துவங்கி, கோயம்பேடு - ஆலந்துார் வழியாக சோழிங்கநல்லுார் செல்லும் இந்த தடத்தில், ஐந்து சுரங்கப்பாதை நிலையங்களும், 39 மேம்பால நிலையங்களும் இடம் பெற உள்ளன.
சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'குறிஞ்சி' என பெயரிடப்பட்டுள்ள முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்துார் சாய்வுதளத்தில் இருந்து கொளத்துார் நிலையம் வரை, 246 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை நேற்று துவங்கியது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கொளத்துார் முதல் நாதமுனி வரையிலான ஐந்து சுரங்கப்பாதை நிலையங்கள் உட்பட 3.90 கி.மீ., துாரத்திற்கு இரட்டை சுரங்கப்பாதையுடன் 7.80 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, 'டாடா பிராஜக்ட்ஸ்' நிறுவனம் மேற்கொள்கிறது.
இதில், கொளத்துார் சாய்வுதளத்தில் இருந்து கொளத்துார் நிலையம் வரையிலான சுரங்கம் தோண்டும் பணியை, வரும் ஜூனில் முடித்து விட்டு, குறிஞ்சி இயந்திரம் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஸ்ரீனிவாச நகர் நோக்கி, 1.06 கி.மீ., நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும்.
இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை, மார்ச் 2025 இறுதிக்குள் சென்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டர் துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ளும். மீதமுள்ள இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து பணிகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

