/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூரை மீன்பிடி துறைமுகம் திறக்கும்முன் சிக்கல் அலை உட்புகுவதால் படகுகள் பாதிக்கும் அபாயம் விரிவாக்கத்திற்கு ரூ.40 கோடி தேவை
/
சூரை மீன்பிடி துறைமுகம் திறக்கும்முன் சிக்கல் அலை உட்புகுவதால் படகுகள் பாதிக்கும் அபாயம் விரிவாக்கத்திற்கு ரூ.40 கோடி தேவை
சூரை மீன்பிடி துறைமுகம் திறக்கும்முன் சிக்கல் அலை உட்புகுவதால் படகுகள் பாதிக்கும் அபாயம் விரிவாக்கத்திற்கு ரூ.40 கோடி தேவை
சூரை மீன்பிடி துறைமுகம் திறக்கும்முன் சிக்கல் அலை உட்புகுவதால் படகுகள் பாதிக்கும் அபாயம் விரிவாக்கத்திற்கு ரூ.40 கோடி தேவை
ADDED : மார் 29, 2025 02:47 AM

திருவொற்றியூர், :திருவொற்றியூர் சூரை மீன்பிடித்துறைமுகத்தில், அலை உட்புகுந்து படகுகள் சேதமாவதை தடுக்க, தென்கிழக்கு தடுப்பு சுவரை, 330 அடி துாரம் நீட்டிக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'தடுப்புச்சுவர் நீட்டிப்பு பணிக்கு, 40 கோடி ரூபாய் வரை தேவைப்படும். பணிக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் தற்போது, 2,000 படகுகளை கையாளும் வசதி உள்ளது. இருப்பினும், இடப்பற்றாக்குறை நிலவுவதற்கு தீர்வாக, திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, 2019ல் துவங்கியது.
தற்போது பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. அதன்படி, 2,000 - 8,000 கிலோ எடையிலான ராட்சத பாறாங்கற்கள், நட்சத்திர கற்கள் பயன்படுத்தி, 272 கோடி ரூபாயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதில், தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், 2,801 அடி துாரம், வடகிழக்கு அலை தடுப்பு சுவர், 1,815 அடி துாரத்திற்கும், சிறிய, பெரிய படகு அணையும் தளங்கள் பல்வேறு தொகுப்புகளாக, 1,815 அடி துாரத்திற்கும் கட்டமைக்கப்பட்டு உள்ளன.
தவிர, சிறிய - பெரிய மீன் ஏலக்கூடம், வானொலி கோபுரம், மீனவர் தங்கும் அறை, பார்க்கிங் யார்டு என, 68 ஏக்கர் பரப்பளவில், துறைமுகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, ஆண்டுக்கு, 60,000 டன் மீன் கையாள முடியும்.
சட்டசபைக் கூட்டத் தொடர் முடிந்ததும், மீன்பிடி துறைமுகம் திறக்கப்படும் என, தெரிகிறது.
இதற்கிடையே, துறைமுகத்திற்குள் அலை வருகிறது. இதனால், புயல், சூறாவளி போன்ற காலத்தில், உள்ளே நிறுத்தப்படும் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, சேதம் ஏற்படும் சூழல் உள்ளது.
ரூ. 40 கோடி தேவை
எனவே, தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், 330 அடி துாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என, மீனவர்கள் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம், சட்டசபை முடிந்த பின், முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
மீனவர்கள், 330 அடி துாரத்திற்கு தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை நீட்டிக்க கோரியுள்ளனர். இந்தப் பணிதற்போது கிடையாது.
அதற்கான சாத்தியகூறுகள் குறித்து, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி., மற்றும் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் இணைந்து, ஆய்வு செய்து வருகின்றன.
அந்த பணி தனி திட்ட மதிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். நீட்டிப்பு பணிக்கு, கடலில் 132 அடி அகலத்திற்கு கற்கள் கொட்டினால் தான், தலா, 26 அடி உயரம் மற்றும் அகலம் வரும்.
இதற்கு, 40 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆய்வு முடிவுக்குப்பின், நிதி ஆதாரங்கள் தெளிவான பின், பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.