/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மயக்கம் வருவதாக நடித்து காரை கடத்திய இருவர் கைது
/
மயக்கம் வருவதாக நடித்து காரை கடத்திய இருவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 12:12 AM
கோயம்பேடு, :மயக்கம் வருவதுபோல் நடித்து 'புக்கிங்' செய்த காரை கடத்திச் சென்ற இருவரை, கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 43. இவர், தன் காரை 'கார் டாக்ஸி சேவை' நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வருகிறார்.
இவரது காரை, பெருங்களத்துாரைச் சேர்ந்த அஜ்மல், 28, என்பவர், பூந்தமல்லி செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு கோயம்பேடில் ஆன்லைனில் 'புக்கிங்' செய்தார்.
காரில் ஏறிய அஜ்மல், மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் அருகே சென்றபோது, திடீரென மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து கார் ஓட்டுநர் சுரேஷ்குமார், சாலையோரம் காரை நிறுத்தி, அங்கிருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார்.
அப்போது அஜ்மல், ஓட்டுநரின் சீட்டிற்கு தாவி, காரை வேகமாக ஓட்டிச்சென்றார். இதுகுறித்து சுரேஷ்குமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் உஷார்படுத்தியதை அடுத்து, போரூர் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த சுரேஷ்குமாரின் காரை வழிமறித்தனர். பின், காரில் இருந்த இரண்டு பேரை கைது செய்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரில் இருந்த மற்றொருவர், போரூர் அருகே ஏறியுள்ளார்.
காரை கடத்திச் சென்ற அஜ்மல், 28, அவரது நண்பர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன், 24 ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.