/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற காவலர் உட்பட இருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற காவலர் உட்பட இருவர் கைது
ADDED : நவ 30, 2024 02:55 AM
சென்னை:சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க, போலீஸ் கமிஷனர் அருண், போதை தடுப்பு பிரிவு ஒன்றை அமைத்துள்ளார். இந்த பிரிவினர், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர், அவர்களுக்கு உடந்தையாக செயல்படுவோரையும் களையெடுத்து வருகின்றனர்.
தனிப்படையினர், அம்பத்துாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கொளத்துார், ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த சுரேந்திரநாத், 37 என்பவர், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி சிக்கினார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், வடபழநி காவல் நிலைய காவலர் ஜேம்ஸ், 35, கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சுரேந்திரநாத், ஜேம்ஸ் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக பழகி வந்துள்ளனர். ஜேம்ஸ் கொடுக்கும் பணத்துடன், சுரேந்திரநாத் பெங்களூரு சென்று, மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருளை வாங்குவதும், பின் சென்னையில் அலைபேசி செயலி வாயிலாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கிடைக்கும் பணத்தை சரிபாதியாக இருவரும் பகிர்ந்து வந்துள்ளனர். இருவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. ஜேம்சிடம் விசாரித்தபோது, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இருவரையும் நேற்ற கைது செய்த போலீசார், 10 கிராம் எடையிலான மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருள், 2 அலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய காவலர் ஒருவரை தேடி வருவதாகவும், தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.