/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னையில் இரண்டு புது பஸ் நிலையங்கள்
/
வடசென்னையில் இரண்டு புது பஸ் நிலையங்கள்
ADDED : ஜூலை 30, 2025 12:39 AM
சென்னை,''வடசென்னையில் தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இரண்டு இடங்களில் புதிதாக பேருந்து நிலையங்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை ஆய்வு செய்தபின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளம் தண்ணீர் வற்றி விட்டது. எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதுகுறித்து ஆய்வு செய்து, நீர் வளத்துறை அதிகாரிகள் ஒரு வாரத்தில் அறிக்கை தருவர்.
ராயபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அமைச்சர் என்ற முறையில் அங்கு சென்று பார்வையிட்டேன். இடம் போதாது என்பதால், தீவுத்திடல் அருகில் பேருந்து நிலையத்தை அமைக்க கூறியிருந்தேன்.
மெட்ரோ ரயில் பணிகளால், வடசென்னையில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது, பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இரண்டு இடங்களில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். எந்த இடங்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

